Tuesday, August 27, 2013

அனிருத் என்கிற ராட்சசன்:

இது யூத் ஐகான் அனிருத்தின் வணக்கம் சென்னை பாடல்களைப் பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.



இசைஞானி, இசைப்புயல், 100 வது ஆல்பம் இசையமைத்திருக்கும் இளைய'ராஜா, இமான் (எல்லாமே 'இ' மயமா இருக்கோ!), நாம் தமிழில் பயன்படுத்தாமல் விட்டு கேரள விருதினைப்பெற்ற வித்யாசாகர், இவர்கள் மத்தியில் இசையமைத்தது மட்டுமில்லாமல் மெகா ஹிட்டும் கொடுத்த அனிருத் பற்றியே இந்தப்பதிவு.

வொய் திஸ் கொலைவெறி? என்ற கொலைவெறி ஹிட் கொடுத்து யார் இது என மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த ராட்சசன் இந்த அனிருத். இந்தப்பாடலுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் யூடியூப்பில். அதன்பின் '3' படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய்க் கொடுத்து... சொல்லப்போனால் இப்போதெல்லாம் 'வொய் திஸ் கொலைவெறி?' பாட்டைக்கேட்டால் நமக்கு பத்திக்கொண்டு வருகிறது. மற்ற பாடல்கள் இன்றும் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சரி. ஒரு படம் ஹிட் கொடுத்தாயிற்று. சர்வைவல் வேண்டுமே. ஃபீல்டில் நிலைத்து நிற்கவேண்டுமே! டேவிட் படத்திற்கு இசையமைத்த ஒரே பாடலான தமிழ் வெர்சன் - 'கனவே கனவே' / ஹிந்தி வெர்சன் 'Yun Hi Re' அனைவரையும் (அனைவரையும் என்பது நடுநிலையான... எனக்குப்பிடித்த ஒரே ஒரு இசையமைப்பாளர் இசையமைப்பது மட்டுமே இசை என எண்ணாத மற்றவர்கள்) கவர்ந்தது. இதெல்லாம் போதாதே. முழுக்க முழுக்க ஹிட் வேண்டும். அதைத்தான் தனது அடுத்த ஆல்பமான எதிர்நீச்சலில் செய்துகாட்டினார் அனிருத்.



'3' மற்றும் 'எதிர்நீச்சல்' படத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' மற்றும் 'கடல்' ஆகியவை மனதிற்கு நெருக்கமாக இருந்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

என்ன இல்லை எதிர்நீச்சலில்? மெலடியா? குத்துப்பாட்டா? ராப்? டூயட்? எல்லாம் கலந்துகட்டி கொடுத்து, தன் இசையறிவை டியூன்களில் ரொம்ப ரொம்ப ஊற்றி பருகக்கொடுத்தானே இந்த ரட்சகன்.

நிற்க. 22 வயதான ஓர் இளைஞன், லெஜெண்ட்களுக்கு மத்தியில் போட்டி போடுவது என்ன அவ்வளவு சாதாரணமா? ஆனால் மிகச்சாதாரணமாக செய்துகொண்டிருக்கிறானே இந்த ராட்சசன்.

எனக்கு அனிருத் இசையை ரொம்ப பிடித்திருக்கிறது. 80-களுக்குப்பின் பிறந்த யாருக்குத்தான் பிடிக்காது?! இதோ இசைஞானியின் மேகா பாடல்கள் வெளியான இந்தத்தருணத்தில் 'வணக்கம் சென்னை' என படையப்பா ரஜினி சல்யூட் அடிப்பதைப்போல செம்ம ஸ்டைலிஷாக வந்து நிற்கிறானே தலைவன்.

'அந்த' முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளிவந்தபோது தூக்கமிழந்து, பப்புல்கம் போல நீ கடித்திழுக்க அந்த உதடுகள்தான் கிடைத்தனவா என மனம்குமுறி சூனியம் / செய்வினை வைக்கக் கிளம்பிய கோடான கோடிப்பேரில் நானும் ஒருவன்தான். ஆனால் தன் இசையால் எங்களை அல்லவா கட்டிப்போட்டாய் நீ!

இனி விசயத்துக்கு வருவோம். (அப்ப நீ இன்னும் ஆரம்பிக்கவேயில்லையா என்போர் பொறுத்தருள்க). இசையை ராஜா என்றும் ரகுமான் என்றும் பிரித்துப்பார்ப்பதே மோசமான மனநிலை. அதைப்போலவே பட்டியலிட்டு தரம்பிரிப்பதும். சென்னை சிட்டி கேங்க்ஸ்டா பாடலில் கொஞ்சமே கொஞ்சம் கங்க்னம் ஸ்டைல் இசை கலந்திருக்கிறது. ஆனால் யூத் அனைவருக்கும் சென்னை தேசியகீதமாக மாறும் அனைத்துத் தகுதிகளும் இந்தப்பாடலுக்கு உண்டு. கிராமிய சாயல் கொண்ட பாடல் இசையமைக்கத் தெரியுமா உங்க அனிருத்துக்கு? என்ற விமர்சனத்தை ஒசக்க ஒசக்கவில் தகர்த்தெரிந்திருக்கிறார். இதற்காகவே வைரமுத்துவின் குட்டி (குட்டி வைரமுத்து. :P ) மதன் கார்க்கி கிராமத்துச் சொல்வழக்கில் பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப்பாட்டில் நேட்டிவிட்டி இல்லையே என்போர் கோட்டைவிட்டு வெளியே நிற்க. உங்க கிராமத்துல கங்க்னம் ஸ்டைல் நுழைந்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதே நிதர்சனம். கொடியை உயர்த்திப்பிடிக்காதீர்.

எங்கடி பொறந்த எங்கடி வளர்ந்த? எங்கடி? எங்கடி? என ஆரம்பித்தாலே திருட்டுக்குமரனின் இந்தப்பாடல் நினைவுக்கு வருவதை யாராலும் மாற்ற முடியாது. அதுமட்டுமில்லாமல் உதடுகடித்த... ச்சே. உள்ளம்கவர்ந்த ஆண்ட்ரியாவும் அனிருத்தும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் இந்தப்பாடலை. இதுபோக 'ஓ! பெண்ணே' 'ஹேய்' எல்லாம் அனிருத்தின் அக்மார்க் சாயல் கொண்ட டூயட்கள்.



அனிருத்தின் பாடல்களில் ரசிகன் கொண்டாட்ட மனநிலைக்குப் பயணிக்கிறான். வாழ்விற்குப் புத்துயிர் கொடுத்து, உண்ணும் சாக்லேட் தீர்வதற்குள் அடுத்த சாக்லேட் கிடைக்கப்பெற்ற குழந்தையின் மனநிலைக்குச் செல்கிறான் ரசிகன். அவ்வகையில் 'வணக்கம் சென்னை' நெரிசல் மிகுந்த பேருந்தில் பயணிக்கையில் கிடைக்கப்பெற்ற சன்னலோர இருக்கைபோல் நச்சென்று கிடைத்திருக்கிறது இசை ரசிகனுக்கு.

வணக்கம் சென்னை டீசரில், கடைசியில் 'An Anirudh Musical' என வரும். ஆமா அதுக்கு என்ன இப்ப?! எனக் கேட்கிறீர்களா? அதெல்லாம் தெரியாது ரசனை அண்ணன் இப்படி சொல்லித்தான் இந்தப்பதிவை முடிச்சிருக்கார். அவ்வ்வ்வ்வ்வ்.

6 comments:

  1. சமீபத்தில் பலதரப்பட்ட பதிவுகள்
    கானல்நீரில் வெள்ளமென வருகின்றது.
    கலகுங்க வாழ்த்துக்கள். மேலும் தொடர்க.
    (அனைத்தையும் படித்தேன் :))

    ReplyDelete
    Replies
    1. நன்றி மச்சி. எல்லாம் தங்களைப்போன்றோரின் ஊக்கம். :-))

      Delete
  2. இந்தப் பதிவில் (ஆன்ட்ரியா மேட்டர் உட்பட) என் மன ஓட்டத்தை அப்டியே பிடித்து எழுதியதற்கு வாழ்த்துகள் :D
    # ராஜபாளையம் குறித்து அனிருத் பாடல் இசையமைத்தால் கிராமி குடுக்க சொன்னாலும் சொல்லுவீங்க :P
    by
    @sureshsaying

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா... அதுல என்ன தப்புங்கறேன். :-))

      Delete
  3. //சொல்லப்போனால் இப்போதெல்லாம் 'வொய் திஸ் கொலைவெறி?' பாட்டைக்கேட்டால் நமக்கு பத்திக்கொண்டு வருகிறது// மீ டூ ...!

    //'அந்த' முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளிவந்தபோது தூக்கமிழந்து, பப்புல்கம் போல நீ கடித்திழுக்க அந்த உதடுகள்தான் கிடைத்தனவா என மனம்குமுறி சூனியம் / செய்வினை வைக்கக் கிளம்பிய கோடான கோடிப்பேரில் நானும் ஒருவன்தான். //

    80-களுக்குப்பின் பிறந்த யாருக்குத்தான் பிடிக்கும் ?! ஹா ஹா ..!

    ஒசாக்கா சூப்பர் ... கடல் படத்தில் கூடுதலாக ஒரு படலை புயல் இசைத்திருந்தால் இப்படிதான் இருந்திருக்குமோ என்று தோன்றியது ....! இது கிராமப்பாட்டா ஜி ...?

    ரசனை அண்ணனின் தம்பிக்கும் நல்ல ரசனைதான் ...!

    ReplyDelete
    Replies
    1. இது சும்மா உசுப்பேற்றல். அனிருத் இன்னும் அசுர உழைப்பைத் தரவேண்டும். பார்ப்போம். :-))

      Delete

தங்கள் கருத்தை பதியவும்...