Saturday, August 31, 2013

அவன் நண்பனா கிடைக்க...

'அவனைமாதிரி ஒருத்தன் நண்பனா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்'. இந்த டையலாக்க எல்லாரும் ஒருமுறையாவது பயன்படுத்திருப்போம். ஆனா நான் அதிகம் உபயோகப்படுத்திருக்கேன். ஆறு. அவன் நண்பனா கிடைக்க...

காலேஜ்மேட், அண்ணன், வெல்விஷர் இப்படி அவனுக்கு என் லைப்ல ஏராளமான ரோல்ஸ். விஜய் ரசிகன். இல்ல இல்ல விஜய் வெறியன். ஆனா விஜய பிடிக்காதவங்களுக்கும் இவன புடிக்கும். ATM பார்த்துட்டு படம் மொக்கைடான்னு ஆரம்பிச்சு ஆனா... (இந்த ஆனா என்பதுதான் அவனிடத்தில் உள்ள ஸ்பெசாலிட்டி) அந்த குழந்தை கவிதை கேட்கிற சீன்ல வாய்க்கு வந்தத ப்ளோவா 'நீயும் நானும் ஒண்ணு..இது காந்தி பொறந்த மண்ணு.. டீ கடைல நின்னு தின்னு பாரு பன்னு...' விஜய் சொல்லுவார். குழந்தை கவிதை சூப்பர்ன்னு சொல்லி போய் பரிச தட்டிட்டு வந்துரும். விஜய் அந்த சீன்ல செம்ம சார்மிங் தெரியுமா? க்ளைமேக்ஸ் வரை இயக்குனரே திரைக்கதைல சுவாரசியமா சொல்லமுடியாத படத்தையும் வெகுசுவாரசியமா சொல்லி முடிப்பான்.

'போடா மயிரு... இதெல்லாம் ஒரு பிரச்சினையா?' எதுவானாலும் இதான் அவனோட அறிவுரையா இருக்கும் பெரும்பாலும். ஆனாலும் மனசுக்கு ஏதாவது கஷ்டம்ன்னா மானமாவது மயிராவதுன்னு அவன்கிட்டதான் முதல் ஆளா போய் நிப்பேன். ஏனோ மனசு லைட்டா பாரமா இருக்குறமாதிரி இருந்ததால 'டேய் மீட் பண்ணலாமா?' '............' 'இல்ல. நானே அங்க வர்றேன்'. சென்னை டிராபிக் ஒத்துழைத்ததால் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே(?!) அவன் அறைக்கதவை தட்டினேன்.

பிள்ளையார் கோவில்களுக்குப் போட்டியாக சென்னைமுழுக்க தெருவுக்குத் தெரு கடை பரப்பியிருக்கும்... ஒடுங்கலான நாயர் கடை ஒன்றுக்குச்சென்று டீ சொல்ல... 'வீட்ல போட்ற டீயில நுரை பொங்கும். இங்க பொங்கிய நுரைய டீயில போடறாங்க'ன்னு நான் மொக்கையா ஏதோ முயற்சிக்க... மெல்லியதாய்ச் சிரித்துவைத்தான்.



மெரினாவிற்கு அருகில் வசிப்போரைப் பொருத்தவரை கடற்கரை என்பது ரேசன் கார்டில் சேர்க்கப்படாத மற்றொரு குடும்ப உறுப்பினர். பிடித்தமான ஒருவருடன் ஒருமுறையாவது கடற்கரையில் நடந்திருந்தால் இந்த வரிகளைப் படிக்கும்போது நிச்சயம் அந்தத் தருணம் மீண்டும் நிகழ்ந்தேறியிருக்கும் உங்களுக்கு. அப்படித்தான் அவனுடன் நடந்த பொழுதுகளை அசைபோடுகிறேன் தற்போது.

கடலைநோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். எதுவும் பேசவில்லை. சிலநிமிடங்கள் மௌனத்தை ஒரு பூவினைப்போல பிடித்திருந்தோம். 'ம்ம் சொல்லுடா. என்னாச்சு?' என்றவன் கேட்டதில் பூ உதிர்ந்தது. எல்லா பிரச்சினையையும் 'அது ஒன்னுமில்லடா' என்றே ஆரம்பித்து சொல்லிப்பழகியிருந்தேன். (அவன் கொடுக்கும் அறிவுரையில் கடைசியில் அதுவெல்லாம் ஒன்னுமே இல்லடா என்றாகிவிடுவது தனிக்கதை).

அந்த நேரத்தில்தான் சிரித்தபடி, கடலின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் பக்கம் விரலை உயர்த்தினான். கவனித்தேன். என்னளவில் அவன் ஆகச்சிறந்த அவதானி. சின்னஞ்சிறிய விசயத்தையும் மிகக்கூர்மையாய் கவனித்து சொல்வான். ஆண் குழந்தை ஒன்று வேகமான அலைகள் வரும்போது அலைக்கு முன்னதாக கரையை அடைவதும் பின் வந்த அலை திரும்புகையில் அதை விரட்டுவதுமாக விளையாடிக்கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல அலையின் மேல் பயமில்லை. அதுவரை நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அவன், சரியாக அலை மோதும்போது தன் டயாப்பர் புட்டத்தை திருப்பிக் காண்பித்து அலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். அந்த தேவ கணத்தில் உதிர்ந்த அவன் சிரிப்பின் உயிர்ப்பை பருகியோருக்கு அமுதம் என்பதெல்லாம் கப்சா.

இப்போது ஆறு ஆரம்பித்தான். 'பார்த்தியா? அந்த பையனோட அப்பாம்மா தவிர்த்து வேற யாருமே இப்படி ஒரு சந்தோசமான காட்சிய கவனிக்கல. இப்படிதான் வாழ்க்கைல கஷ்டங்களுக்கு நடுவுல நமக்கு கிடைக்குற... இல்லாடி நம்மால ஏற்படுத்திக்க முடியுற சந்தோசத்த நாம கவனிக்காம் விட்டுடறோம் இல்ல!'. எனக்குள் பல்பு எரிந்தது.

பிரச்சினையை சொல்லும் முன்பே இது அவன் தரும் அறிவுரையாபட்டது. உண்மைதான். ஸ்கூல் படிக்குறப்ப லாங்-லீவ் முடிஞ்சு பள்ளி திறப்பதற்கு முதல்நாள் வேப்பங்காயா கசந்தது. இரண்டுநாட்கள் பள்ளி சென்று திரும்பிட்டா அப்புறம் காய்ச்சல் வந்தாலும் பசங்களோட இருக்குறதுதான் ஜாலின்னு லீவ் போடாம ஸ்கூல் போவோம். (இதன் மூலம் சொல்ல வருவதென்னவென்றால் காய்ச்சல் வந்தபோதும் நான் பள்ளி சென்றிருக்கிறேன். நோட் திஸ் ஐ சே).

'ம்ம். சொல்லுடா நீ ஏதோ பேசனும்ன்னு வந்த...'.

'இல்லடா சும்மாதான். நாம பேசி நாளாச்சேன்னு வரட்டுமான்னு கேட்டேன்'.

'வேற ஒன்னுமில்லையே?! பாரு. டக்குன்னு கிளைமேட் சேஞ்ச் ஆகிடுச்சு. இன்னொரு டீ சாப்பிடலாமா?'

உண்மையில் க்ளைமேட்டைவிடவும் நான் அதிகம் சில்லென மாறியிருந்தேன். லவ் யூ டா ஆறு. இங்க டீ சூப்பரா இருக்கும்டா என்றபடி அவன் டீயை நீட்டினான். புண்பட்ட மனதை டீ விட்டு ஆற்ற ஆரம்பித்தேன்.

சரி இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம் எங்களுக்கு சொல்ற? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.
1.இன்று ஆறுவிற்கு பிறந்தநாள். அவனுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
2.அவனமாதிரி ஒரு நண்பன் கிடைக்க...
3.எனக்கு இப்ப தூக்கம் வரல. எழுதணும்ன்னு தோனுச்சு. எழுதிட்டேன்.

எல்லாம் சரி. என்ன பிரச்சினைக்காக ஆற சந்திக்கப்போன? அதப்பத்தி சொல்லவே இல்லையே! - இது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம். எப்படி பாஸ்? ஆறுவிடமே சொல்லாத அந்தப் பிரச்சினையை உங்களிடம் மட்டும் சொல்லிவிடப் போகிறேனா என்ன?! நெவர்.

அவனைமாதிரியே 'போடா மயிரு' என மனதளவில் திட்டிக்கொள்ளுங்கள். கமெண்ட் பாக்ஸ் புனிதமானது.

8 comments:

  1. yes, comment box punithamanathu, athan...

    ReplyDelete
  2. //அவனைமாதிரியே 'போடா மயிரு' என மனதளவில் திட்டிக்கொள்ளுங்கள். கமெண்ட் பாக்ஸ் புனிதமானது.//

    done boss....!

    ReplyDelete
  3. லீவ் போடாம பள்ளிக்கு போனா பரிசெல்லாம் தருவாங்களே யுவர் ஆனர்.:)) நாங்க பல தட்டு வாங்கிருக்கோம்.

    ReplyDelete
  4. U r so lucky Thambi !!!

    ReplyDelete
  5. Great boss. Keep blogging. After long time I read a complete post in a blog.

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...