Saturday, August 31, 2013

அவன் நண்பனா கிடைக்க...

'அவனைமாதிரி ஒருத்தன் நண்பனா கிடைக்க கொடுத்து வச்சிருக்கனும்'. இந்த டையலாக்க எல்லாரும் ஒருமுறையாவது பயன்படுத்திருப்போம். ஆனா நான் அதிகம் உபயோகப்படுத்திருக்கேன். ஆறு. அவன் நண்பனா கிடைக்க...

காலேஜ்மேட், அண்ணன், வெல்விஷர் இப்படி அவனுக்கு என் லைப்ல ஏராளமான ரோல்ஸ். விஜய் ரசிகன். இல்ல இல்ல விஜய் வெறியன். ஆனா விஜய பிடிக்காதவங்களுக்கும் இவன புடிக்கும். ATM பார்த்துட்டு படம் மொக்கைடான்னு ஆரம்பிச்சு ஆனா... (இந்த ஆனா என்பதுதான் அவனிடத்தில் உள்ள ஸ்பெசாலிட்டி) அந்த குழந்தை கவிதை கேட்கிற சீன்ல வாய்க்கு வந்தத ப்ளோவா 'நீயும் நானும் ஒண்ணு..இது காந்தி பொறந்த மண்ணு.. டீ கடைல நின்னு தின்னு பாரு பன்னு...' விஜய் சொல்லுவார். குழந்தை கவிதை சூப்பர்ன்னு சொல்லி போய் பரிச தட்டிட்டு வந்துரும். விஜய் அந்த சீன்ல செம்ம சார்மிங் தெரியுமா? க்ளைமேக்ஸ் வரை இயக்குனரே திரைக்கதைல சுவாரசியமா சொல்லமுடியாத படத்தையும் வெகுசுவாரசியமா சொல்லி முடிப்பான்.

'போடா மயிரு... இதெல்லாம் ஒரு பிரச்சினையா?' எதுவானாலும் இதான் அவனோட அறிவுரையா இருக்கும் பெரும்பாலும். ஆனாலும் மனசுக்கு ஏதாவது கஷ்டம்ன்னா மானமாவது மயிராவதுன்னு அவன்கிட்டதான் முதல் ஆளா போய் நிப்பேன். ஏனோ மனசு லைட்டா பாரமா இருக்குறமாதிரி இருந்ததால 'டேய் மீட் பண்ணலாமா?' '............' 'இல்ல. நானே அங்க வர்றேன்'. சென்னை டிராபிக் ஒத்துழைத்ததால் அடுத்த ஒரு மணிநேரத்திலேயே(?!) அவன் அறைக்கதவை தட்டினேன்.

பிள்ளையார் கோவில்களுக்குப் போட்டியாக சென்னைமுழுக்க தெருவுக்குத் தெரு கடை பரப்பியிருக்கும்... ஒடுங்கலான நாயர் கடை ஒன்றுக்குச்சென்று டீ சொல்ல... 'வீட்ல போட்ற டீயில நுரை பொங்கும். இங்க பொங்கிய நுரைய டீயில போடறாங்க'ன்னு நான் மொக்கையா ஏதோ முயற்சிக்க... மெல்லியதாய்ச் சிரித்துவைத்தான்.



மெரினாவிற்கு அருகில் வசிப்போரைப் பொருத்தவரை கடற்கரை என்பது ரேசன் கார்டில் சேர்க்கப்படாத மற்றொரு குடும்ப உறுப்பினர். பிடித்தமான ஒருவருடன் ஒருமுறையாவது கடற்கரையில் நடந்திருந்தால் இந்த வரிகளைப் படிக்கும்போது நிச்சயம் அந்தத் தருணம் மீண்டும் நிகழ்ந்தேறியிருக்கும் உங்களுக்கு. அப்படித்தான் அவனுடன் நடந்த பொழுதுகளை அசைபோடுகிறேன் தற்போது.

கடலைநோக்கி நடக்கத் தொடங்கியிருந்தோம். எதுவும் பேசவில்லை. சிலநிமிடங்கள் மௌனத்தை ஒரு பூவினைப்போல பிடித்திருந்தோம். 'ம்ம் சொல்லுடா. என்னாச்சு?' என்றவன் கேட்டதில் பூ உதிர்ந்தது. எல்லா பிரச்சினையையும் 'அது ஒன்னுமில்லடா' என்றே ஆரம்பித்து சொல்லிப்பழகியிருந்தேன். (அவன் கொடுக்கும் அறிவுரையில் கடைசியில் அதுவெல்லாம் ஒன்னுமே இல்லடா என்றாகிவிடுவது தனிக்கதை).

அந்த நேரத்தில்தான் சிரித்தபடி, கடலின் அலைகளில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையின் பக்கம் விரலை உயர்த்தினான். கவனித்தேன். என்னளவில் அவன் ஆகச்சிறந்த அவதானி. சின்னஞ்சிறிய விசயத்தையும் மிகக்கூர்மையாய் கவனித்து சொல்வான். ஆண் குழந்தை ஒன்று வேகமான அலைகள் வரும்போது அலைக்கு முன்னதாக கரையை அடைவதும் பின் வந்த அலை திரும்புகையில் அதை விரட்டுவதுமாக விளையாடிக்கொண்டிருந்தது.

நேரம் செல்ல செல்ல அலையின் மேல் பயமில்லை. அதுவரை நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அவன், சரியாக அலை மோதும்போது தன் டயாப்பர் புட்டத்தை திருப்பிக் காண்பித்து அலையோடு விளையாடிக்கொண்டிருந்தான். அந்த தேவ கணத்தில் உதிர்ந்த அவன் சிரிப்பின் உயிர்ப்பை பருகியோருக்கு அமுதம் என்பதெல்லாம் கப்சா.

இப்போது ஆறு ஆரம்பித்தான். 'பார்த்தியா? அந்த பையனோட அப்பாம்மா தவிர்த்து வேற யாருமே இப்படி ஒரு சந்தோசமான காட்சிய கவனிக்கல. இப்படிதான் வாழ்க்கைல கஷ்டங்களுக்கு நடுவுல நமக்கு கிடைக்குற... இல்லாடி நம்மால ஏற்படுத்திக்க முடியுற சந்தோசத்த நாம கவனிக்காம் விட்டுடறோம் இல்ல!'. எனக்குள் பல்பு எரிந்தது.

பிரச்சினையை சொல்லும் முன்பே இது அவன் தரும் அறிவுரையாபட்டது. உண்மைதான். ஸ்கூல் படிக்குறப்ப லாங்-லீவ் முடிஞ்சு பள்ளி திறப்பதற்கு முதல்நாள் வேப்பங்காயா கசந்தது. இரண்டுநாட்கள் பள்ளி சென்று திரும்பிட்டா அப்புறம் காய்ச்சல் வந்தாலும் பசங்களோட இருக்குறதுதான் ஜாலின்னு லீவ் போடாம ஸ்கூல் போவோம். (இதன் மூலம் சொல்ல வருவதென்னவென்றால் காய்ச்சல் வந்தபோதும் நான் பள்ளி சென்றிருக்கிறேன். நோட் திஸ் ஐ சே).

'ம்ம். சொல்லுடா நீ ஏதோ பேசனும்ன்னு வந்த...'.

'இல்லடா சும்மாதான். நாம பேசி நாளாச்சேன்னு வரட்டுமான்னு கேட்டேன்'.

'வேற ஒன்னுமில்லையே?! பாரு. டக்குன்னு கிளைமேட் சேஞ்ச் ஆகிடுச்சு. இன்னொரு டீ சாப்பிடலாமா?'

உண்மையில் க்ளைமேட்டைவிடவும் நான் அதிகம் சில்லென மாறியிருந்தேன். லவ் யூ டா ஆறு. இங்க டீ சூப்பரா இருக்கும்டா என்றபடி அவன் டீயை நீட்டினான். புண்பட்ட மனதை டீ விட்டு ஆற்ற ஆரம்பித்தேன்.

சரி இப்ப எதுக்கு இந்த கதையெல்லாம் எங்களுக்கு சொல்ற? என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம்.
1.இன்று ஆறுவிற்கு பிறந்தநாள். அவனுக்கு இந்தப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.
2.அவனமாதிரி ஒரு நண்பன் கிடைக்க...
3.எனக்கு இப்ப தூக்கம் வரல. எழுதணும்ன்னு தோனுச்சு. எழுதிட்டேன்.

எல்லாம் சரி. என்ன பிரச்சினைக்காக ஆற சந்திக்கப்போன? அதப்பத்தி சொல்லவே இல்லையே! - இது உங்களின் அடுத்த கேள்வியாக இருக்கலாம். எப்படி பாஸ்? ஆறுவிடமே சொல்லாத அந்தப் பிரச்சினையை உங்களிடம் மட்டும் சொல்லிவிடப் போகிறேனா என்ன?! நெவர்.

அவனைமாதிரியே 'போடா மயிரு' என மனதளவில் திட்டிக்கொள்ளுங்கள். கமெண்ட் பாக்ஸ் புனிதமானது.

Tuesday, August 27, 2013

அனிருத் என்கிற ராட்சசன்:

இது யூத் ஐகான் அனிருத்தின் வணக்கம் சென்னை பாடல்களைப் பற்றிய விமர்சனம் அல்ல. விமர்சிக்க எனக்கு தகுதியில்லை.



இசைஞானி, இசைப்புயல், 100 வது ஆல்பம் இசையமைத்திருக்கும் இளைய'ராஜா, இமான் (எல்லாமே 'இ' மயமா இருக்கோ!), நாம் தமிழில் பயன்படுத்தாமல் விட்டு கேரள விருதினைப்பெற்ற வித்யாசாகர், இவர்கள் மத்தியில் இசையமைத்தது மட்டுமில்லாமல் மெகா ஹிட்டும் கொடுத்த அனிருத் பற்றியே இந்தப்பதிவு.

வொய் திஸ் கொலைவெறி? என்ற கொலைவெறி ஹிட் கொடுத்து யார் இது என மொத்த இந்தியாவையும் திரும்பிப்பார்க்க வைத்த ராட்சசன் இந்த அனிருத். இந்தப்பாடலுக்கு 70 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் யூடியூப்பில். அதன்பின் '3' படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாய்க் கொடுத்து... சொல்லப்போனால் இப்போதெல்லாம் 'வொய் திஸ் கொலைவெறி?' பாட்டைக்கேட்டால் நமக்கு பத்திக்கொண்டு வருகிறது. மற்ற பாடல்கள் இன்றும் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சரி. ஒரு படம் ஹிட் கொடுத்தாயிற்று. சர்வைவல் வேண்டுமே. ஃபீல்டில் நிலைத்து நிற்கவேண்டுமே! டேவிட் படத்திற்கு இசையமைத்த ஒரே பாடலான தமிழ் வெர்சன் - 'கனவே கனவே' / ஹிந்தி வெர்சன் 'Yun Hi Re' அனைவரையும் (அனைவரையும் என்பது நடுநிலையான... எனக்குப்பிடித்த ஒரே ஒரு இசையமைப்பாளர் இசையமைப்பது மட்டுமே இசை என எண்ணாத மற்றவர்கள்) கவர்ந்தது. இதெல்லாம் போதாதே. முழுக்க முழுக்க ஹிட் வேண்டும். அதைத்தான் தனது அடுத்த ஆல்பமான எதிர்நீச்சலில் செய்துகாட்டினார் அனிருத்.



'3' மற்றும் 'எதிர்நீச்சல்' படத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வெளியான 'நீதானே என் பொன்வசந்தம்' மற்றும் 'கடல்' ஆகியவை மனதிற்கு நெருக்கமாக இருந்தது என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை.

என்ன இல்லை எதிர்நீச்சலில்? மெலடியா? குத்துப்பாட்டா? ராப்? டூயட்? எல்லாம் கலந்துகட்டி கொடுத்து, தன் இசையறிவை டியூன்களில் ரொம்ப ரொம்ப ஊற்றி பருகக்கொடுத்தானே இந்த ரட்சகன்.

நிற்க. 22 வயதான ஓர் இளைஞன், லெஜெண்ட்களுக்கு மத்தியில் போட்டி போடுவது என்ன அவ்வளவு சாதாரணமா? ஆனால் மிகச்சாதாரணமாக செய்துகொண்டிருக்கிறானே இந்த ராட்சசன்.

எனக்கு அனிருத் இசையை ரொம்ப பிடித்திருக்கிறது. 80-களுக்குப்பின் பிறந்த யாருக்குத்தான் பிடிக்காது?! இதோ இசைஞானியின் மேகா பாடல்கள் வெளியான இந்தத்தருணத்தில் 'வணக்கம் சென்னை' என படையப்பா ரஜினி சல்யூட் அடிப்பதைப்போல செம்ம ஸ்டைலிஷாக வந்து நிற்கிறானே தலைவன்.

'அந்த' முத்தக்காட்சி புகைப்படங்கள் வெளிவந்தபோது தூக்கமிழந்து, பப்புல்கம் போல நீ கடித்திழுக்க அந்த உதடுகள்தான் கிடைத்தனவா என மனம்குமுறி சூனியம் / செய்வினை வைக்கக் கிளம்பிய கோடான கோடிப்பேரில் நானும் ஒருவன்தான். ஆனால் தன் இசையால் எங்களை அல்லவா கட்டிப்போட்டாய் நீ!

இனி விசயத்துக்கு வருவோம். (அப்ப நீ இன்னும் ஆரம்பிக்கவேயில்லையா என்போர் பொறுத்தருள்க). இசையை ராஜா என்றும் ரகுமான் என்றும் பிரித்துப்பார்ப்பதே மோசமான மனநிலை. அதைப்போலவே பட்டியலிட்டு தரம்பிரிப்பதும். சென்னை சிட்டி கேங்க்ஸ்டா பாடலில் கொஞ்சமே கொஞ்சம் கங்க்னம் ஸ்டைல் இசை கலந்திருக்கிறது. ஆனால் யூத் அனைவருக்கும் சென்னை தேசியகீதமாக மாறும் அனைத்துத் தகுதிகளும் இந்தப்பாடலுக்கு உண்டு. கிராமிய சாயல் கொண்ட பாடல் இசையமைக்கத் தெரியுமா உங்க அனிருத்துக்கு? என்ற விமர்சனத்தை ஒசக்க ஒசக்கவில் தகர்த்தெரிந்திருக்கிறார். இதற்காகவே வைரமுத்துவின் குட்டி (குட்டி வைரமுத்து. :P ) மதன் கார்க்கி கிராமத்துச் சொல்வழக்கில் பாடலை எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்தப்பாட்டில் நேட்டிவிட்டி இல்லையே என்போர் கோட்டைவிட்டு வெளியே நிற்க. உங்க கிராமத்துல கங்க்னம் ஸ்டைல் நுழைந்து ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதே நிதர்சனம். கொடியை உயர்த்திப்பிடிக்காதீர்.

எங்கடி பொறந்த எங்கடி வளர்ந்த? எங்கடி? எங்கடி? என ஆரம்பித்தாலே திருட்டுக்குமரனின் இந்தப்பாடல் நினைவுக்கு வருவதை யாராலும் மாற்ற முடியாது. அதுமட்டுமில்லாமல் உதடுகடித்த... ச்சே. உள்ளம்கவர்ந்த ஆண்ட்ரியாவும் அனிருத்தும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள் இந்தப்பாடலை. இதுபோக 'ஓ! பெண்ணே' 'ஹேய்' எல்லாம் அனிருத்தின் அக்மார்க் சாயல் கொண்ட டூயட்கள்.



அனிருத்தின் பாடல்களில் ரசிகன் கொண்டாட்ட மனநிலைக்குப் பயணிக்கிறான். வாழ்விற்குப் புத்துயிர் கொடுத்து, உண்ணும் சாக்லேட் தீர்வதற்குள் அடுத்த சாக்லேட் கிடைக்கப்பெற்ற குழந்தையின் மனநிலைக்குச் செல்கிறான் ரசிகன். அவ்வகையில் 'வணக்கம் சென்னை' நெரிசல் மிகுந்த பேருந்தில் பயணிக்கையில் கிடைக்கப்பெற்ற சன்னலோர இருக்கைபோல் நச்சென்று கிடைத்திருக்கிறது இசை ரசிகனுக்கு.

வணக்கம் சென்னை டீசரில், கடைசியில் 'An Anirudh Musical' என வரும். ஆமா அதுக்கு என்ன இப்ப?! எனக் கேட்கிறீர்களா? அதெல்லாம் தெரியாது ரசனை அண்ணன் இப்படி சொல்லித்தான் இந்தப்பதிவை முடிச்சிருக்கார். அவ்வ்வ்வ்வ்வ்.

Monday, August 26, 2013

ஊர்சுற்றியின் தாழங்குப்ப பயண அனுபவம்

பொதுவா தென்தமிழகத்தில் இருந்து வரும் எல்லாரும் சென்னைலாம் ஒரு ஊரா பாஸ்?! அப்படின்னு சலிப்பா சொல்றது ஒரு டிரென்ட்டாவே ஆகிடுச்சு. நானும் தென்தமிழகத்தச் சேர்ந்தவன்தான். ஆனா எனக்கும் சென்னைக்கும் புலப்படாத ஏதோவொரு பந்தம் உண்டுபோல.

பஸ் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக்கடந்த பிளாட்பார்மை என்றாவது ஒருநாள் சீக்கிரம் கிளம்பி மெதுவாகக் கடந்தால் அடிமனசுல இருந்து ஒரு சந்தோசம் வருமே, அப்படித்தான் வாரம் முழுக்க பரபரப்பாக இருக்கும் சென்னையை ஞாயிறன்று அதிகாலை சீக்கிரம் எழுந்து சுற்றிவருவதும். பொதுவாக அதிகாலை நேரத்தில் எந்த ஊரும் / நகரமும் அழகு! சென்னை பேரழகு.

இப்படியாக ஒரு ஞாயிறின் அதிகாலை 4 மணிக்கு குளித்துக் கிளம்பி என்னூருக்கு அருகிலிருக்கும் தாழங்குப்பம் பகுதிக்குச் சென்றதைப் பற்றிய பதிவுதான் இது. (அவ்வளவுதானா என நினைப்பவர்கள் இத்தோடு வாசிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்)

புகைப்படக் கலைஞர்களுக்கு இது ஓர் சொர்க்கபுரி. அப்புறம் ஏன்டா நீ போனன்னு கேட்கக்கூடாது. இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கு. கைவசம் 8 MP கேமரா வசதியுள்ள மொபைல் இருக்கு. (இதவச்சுதான் ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கேன்). உடன் அசல் புகைப்படக் கலைஞர்களான கண்ணனையும் (பிசாசுக்குட்டி என்ற புனைப்பெயருக்கு ஏற்ப ட்விட்டரில் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு திரிவானே அவனேதான்) தமிழ்க்குமரனையும் (@karpadhu_tamil) அழைத்துக்கொண்டு சென்றாயிற்று. வயசுல சின்னப்பசங்கள சேர்த்துக்கிட்டு ஊர்சுத்துரதுல பலநன்மைகள் இருக்கு. அதைப்பற்றி இன்னொரு பதிவே எழுதலாம். அவ்வ்.

(@karpadhu_tamil & @pisasukkutti)
 
4 மணிக்கு அடையாரிலிருந்து கிளம்பிய நான் மிகச்சரியாக 4.30 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேசன்ல இருந்தேன். இதுவே பீக் ஹவர்ன்னா அடையாரையே தாண்டிருக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் படிக்குறப்ப எப்படி ஒரு தனி உலகத்துல பயணிச்சிட்டு வந்தோமோ அதேமாதிரிதான் சென்னை MRTS-ல் பயணிப்பதும். அதை மையமா வச்சு தனி உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு.

இந்த இடத்துல ஒரு டிப்ஸ் சொல்லியே ஆகணும். சென்னை லோக்கல் ட்ரெயின்ல நெய் பிஸ்கட் என்றொரு பதார்த்தத்தை விற்றபடி வரும் வியாபாரிகளை உங்கள தாண்டிப்போக விட்றாதீங்க. அதுவும் சூடா சிலர் விப்பாங்க. கண்டிப்பா வாங்கி டேஸ்ட் பார்த்திடுங்க. வேற எங்கயுமே இப்படியொரு சுவைல கிடைக்காது. ஸ்ட்ராங்லி ரெக்கமெண்டட்.

ரயில் சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி விடியத் துவங்கும் சிவந்த கீழ்வானம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை இந்த வார்த்தைகளில் சொல்லமுடியாமல் தவிக்கிறேன் (எஸ்.ராத்தனமா இப்படி சில வார்த்தைகள் எழுதினாத்தான் பதிவு எழுதின திருப்தியே கிடைக்குது. மன்னிச்சு). ஒருவழியா 5.30-க்கு எண்ணூர் சென்றடைந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் தாழங்குப்பத்திற்கு ஷேர் ஆட்டோ கிடைக்காமல் ('போடாங்' என சென்னை பாஷையில் மனசுக்குள் திட்டிக்கொண்டே) பொடிநடையாகவே நடக்க ஆரம்பித்து கடற்கரையை சென்றடைந்தோம்.


தாழங்குப்பம் கப்பல்த்துறையை (Pier) கரையிலிருந்து பார்த்தபோது மரியான் தனுஷாட்டம் 'ஆத்தா' என்று பரவசப்பட்டு 'க்ளிக்க' ஆரம்பித்தோம். கொசஸ்தலை ஆறு வங்காள விரிகுடாவில் கடக்கும் கழிமுகம் என்றால் நமக்கு தெரியாதுதான். இது என்ன இடம்ன்னு புரியும்படியா சொல்லனும்ன்னா 'காக்க காக்க' திரைப்பட கிளைமேக்ஸ் ஃபைட் நடக்குமிடம் இதுதான். தரைதட்டா கடலின் ஆழத்தில் நிற்கும் கப்பலின் சரக்குகளை கரைக்கு கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டு தற்போது சிதிலமடைந்த எச்சமாக உள்ளது.

உடன்வந்த பசங்க ரெண்டுபேரும் டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுக்கும்போது கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம, மன்னன் படத்தில் ஓட்டைக்கண்ணாடி அணிந்து சிரிச்சமுகமா இருக்கும் தலைவரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு என் மொபைலில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். கடற்கரையில் அமர்ந்தபடி சூரியோதயம் பார்ப்பது மழைநேரத்தில் சூடா பஜ்ஜி சாப்பிடறமாதிரி அலுக்கவே அலுக்காத விசயம்.

கொசஸ்தலை ஆறு ஒருபுறம், அது முழுக்க படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள், அது கலக்குமிடத்தில் கடல்த்துறை, சீறீயபடி அலைகளைக்கொண்ட கடல் என புகைப்பட விரும்பிகளுக்கு ஏற்ற இடம் இந்த தாழங்குப்பம். அதுக்காக பேமிலியோட டூர் போகணும்ன்னு நெனச்சு இங்கவந்தா வேஸ்ட். சுற்றி வேறேதும் கிடையாது.



சிதிலமடைந்த அந்த தூண்களில் ஏறி பாதிக்கடந்தவரை பயமில்ல. சீறிவரும் அலைகளைக் கண்டபோதுகூட பயமில்ல. கீழமுழுக்க பாறைகளால் நிறைந்த கடல் என்றும் ரெண்டுநாள் முன்னாடிதான் ஒருத்தர் தவறிவிழுந்து தவறிட்டார் எனக்கேட்டதும் கைகள் காற்றில் டைப்படிக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடலுக்கு புறமுதுகுகாட்டி கரையை அடைந்தேன். இந்தவிசயம் தெரியாதவரைக்கும் யார்கிட்ட வேணாலும் "பயம்மா?! எனக்கா?!" என பன்ச் விட்டுக்கலாம். அவ்வ்.

சென்ட்ரலிலிருந்து ரிட்டனுக்கும் சேர்த்து எடுத்த டிக்கெட், சாப்பிட்ட டீ மற்றும் பஜ்ஜியை சேர்த்து ஒரு ஆளுக்கு சராசரியாக ரூபாய் முப்பதுக்குள் சீப் பட்ஜெட்டில் பயணம் முடிஞ்சது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவச்சுட்டு முடிஞ்சா ஒருமுறை போய் ரசிச்சுட்டு வாங்க பாஸ்.


அவ போய்ட்டா மச்சான்

கார்த்திக். அழகென்று சொல்லமுடியாத அளவுக்கு இல்லாவிட்டாலும் சுமாரான அழகு. சென்னை மாநகர் தத்தெடுத்த கோடியில் ஒருவனாய் வெகு சமீபத்தில் இணைந்தவன். சோம்பேறி பேச்சுலர். ஞாயிறன்று ரூம்ல நடந்த ஏதோவொரு களேபரத்துல தூக்கம் களைந்து... மறுபடியும் தூங்கலாமா இல்ல எந்திச்சுறலாமான்னு யோசிச்சுகிட்டு இருக்குறப்ப... அவன் செல் சிணுங்கி இவனை எழுப்பி உட்கார வைத்தது. எடுத்து காதோரம் வைத்தபடி ஒரு "ஹலோவை" உதிர்த்தான். எதிர்ப்புறத்தில் இரண்டொரு நிமிடம் நீடித்த மௌனம் அதன்பின் இவனை பல "ஹலோக்கள்" உதிர்க்க வைத்தது.



மௌனம் உடைந்து வெளிப்பட்டது எதிர்ப்புறம் ஓர் இனிமையான பெண் குரல். உண்மையில் பெண்குரல் கேட்டதும் இவனுக்குள் "கிக்". கார்த்திக்கை பொறுத்தவரை தன்னை யோக்கியனாக காட்டிக்கொள்ள நினைக்கும் அடிமுட்டாள். பெண்கள் எதிரில் வந்தால் பார்வையை வேறு பக்கம் திருப்பி கடந்துவிடுவான். ஆனால் கடந்தபின் கள்ளத்தனமாய் அதே பெண்களை கிட்டத்தட்ட நினைவுகளால் கற்பழித்துக் கொண்டிருப்பான். பெண்கள் விசயத்தில் தன் தாழ்வு மனப்பான்மையை மறைக்க இவனுக்கு இந்த யோக்கியன் திரை அவசியமாகப்பட்டது. இப்படிப்பட்டவனுக்கு ஒரு பெண்ணிடமிருந்து திடீரென அழைப்பு வந்ததில் அவனுக்கே ஆச்சர்யம்தான்.

ஹலோ... கார்த்திக்?

ஆமா நான் கார்த்திக் தான் பேசுறேன். சொல்லுங்க. நீங்க?

நான் ப்ரியா பேசுறேன். பெருந்துறைல ஒண்ணா வொர்க் பண்ணோமே ஞாபகம் இருக்கா?

(பழைய கம்பெனில இவனோட ப்ரியாங்கற பேர்ல நிறையப்பேர் வேலை செஞ்சதால யார்ன்னு இவனால டக்குன்னு ஞாபகப்படுத்த முடியல.)

"ஓ! சரியா ஞாபகம் இல்லையே. சொல்லுங்க. எந்த ப்ரியா?" என கார்த்திக் கேட்டு முடிப்பதற்கும் ப்ரியா அழ ஆரம்பித்ததற்கும் சரியாக இருந்தது.

அட! ஏன் அழறீங்க? முதல்ல அழறத நிறுத்துங்க. என்னாச்சு?

______

சொல்றேன்ல... முதல்ல அழாதீங்க. என்னாச்சுன்னு சொல்லுங்க. ஹலோ...

இல்ல கார்த்திக். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம்.

கார்த்திக் சந்தித்த முதல் இடி இது. அதுவரை இவனுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த வயலின் சத்தம் "மியூட்டானது".

கொஞ்சம் குரலை வரவழைத்துக் கொண்டு...

ஓ! வாழ்த்துகள். அப்புறம் ஏன் அழறீங்க? சந்தோசமால்ல இருக்கணும்?!

இல்ல கார்த்திக். இத எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. நாளைக்கு எனக்கு கல்யாணம். அதுக்குள்ள உங்ககிட்ட இத சொல்லிட்டா என்கிட்ட இருக்குற பாரத்த இன்னையோட இறக்கிவச்ச மாதிரி இருக்கும்.

ம்ம்... சொல்லுங்க.

நீங்க கம்பெனில ஜாயின் பண்ண ஆரம்பத்துல இருந்தே உங்கள எனக்கு பிடிச்சிருந்தது. ஒன்னரை வருசமா நான் உங்கள லவ் பண்ணேன்.

தனக்கு காதலியே இல்லைன்னு வருத்தப்பட்ட ஒருத்தனுக்கு நாளைக்கு கல்யாணத்த வச்சிட்டு இத்தனை நாள் காதலிச்சதா ஒரு பொண்ணு சொன்னா எந்த அளவுக்கு வலிச்சிருக்கும். நம்ம ஆளுக்கு இது இரண்டாவது இடி. யார்றா இவ லூசு? இத ஏன் முதல்லையே சொல்லலன்னு அவனுக்குள் ப்ரியாவைப்பற்றி கோபமாய் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தது.

நிஜமாவே இப்ப கார்த்திக்குக்கு ஆக்ஸிசன் தேவைப்பட்டது.
மாடிப்படியில் ஏறிக்கொண்டிருந்தான்.

என்ன சொல்றீங்க? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம். இப்ப சொல்றீங்க?

ம்ம்... இப்ப கூட சொல்லிருக்க மாட்டேன். ஆனா மனசு உறுத்தலா இருந்தது. இப்ப சொல்லாட்டி வேற எப்பவுமே சொல்லமுடியாது. மனசு கேக்கல. அதான்.

____

என்னால முடியலைங்க. விம்மலில் தொடங்கி உடைந்து அழ ஆரம்பித்திருந்தாள் ப்ரியா.

இரண்டு இடிகள் சந்தித்த காரணத்தால் இதுவரை சமாதானம் செஞ்ச நம்ம ஆளுக்கு கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்திருந்தது. கார்த்திக் அழுததற்கு முழுக்க முழுக்க "வட போச்சே" காரணம்தான். யாருக்கு யார் சமாதானம் செய்றதுன்னு அவங்களுக்குள்ள குழப்பமே வரல. பாரபட்சமே இல்லாம இரண்டு பக்கமும் அமைதி... அழுகை... அமைதி... என சுழற்சிமுறை நடந்துகொண்டிருந்தது.

முதலிலேயே காதலை சொல்லாமல் விட்டதற்காக ப்ரியாவும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டு இப்ப சொல்றாளேன்னு கார்த்திக்கும் ஜீரணிக்க ஏதேனும் வழி உண்டா எனத்தேடி வேறு வழியில்லாமால் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தார்கள்.

லைட் ப்ளூ கலர் சர்ட்டும் கருப்பு பேன்ட்டுமாய் இவன் கம்பெனியில் நுழைந்தது முதல்... கம்பெனிய விட்டு போனது வரைக்கும் சொல்ல நிறைய சம்பவங்கள் இருந்தது ப்ரியாவிடம்.

சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லிவிட்டு பெரும்பாரம் இறக்கிய நிம்மதியில் கண் துடைத்தபடி அழைப்பை துண்டித்தாள் ப்ரியா. அவள் இறக்கிவைத்த சுமையை அவளுக்காய் இன்றும் சுமந்து கொண்டிருக்கிறான் கார்த்திக்.

தன்னை ஒரு பொண்ணு இப்படி விரட்டி விரட்டி லவ் பண்ணியிருக்கான்னு இதோ இப்ப நினச்சாகூட கார்த்திக்கு ஆச்சர்யமாத்தான் இருக்கு. இந்த சம்பவம் நடந்து முழுசா ரெண்டு வருசமாச்சு. ப்ரியாவோட குழந்தைக்கு முதல் பிறந்தநாளும் முடிஞ்சுருச்சு. நம்ம ஆளுதான் இன்னும் ப்ரியான்னு யார் அறிமுகமானாலும் சோகப்பார்வை வீசிக்கொண்டும்... ஃபீலிங்க்ஸ் பாட்ட மொபைல்ல கதறவிட்டு திரியுறார். உலகத்துலயே ஒரே ஒரு ஃபோன் கால்ல ஆரம்பிச்சு... முடிஞ்சு... நினைவுகளில் தொடர்ற காதல்கதை நம்ம கார்த்திக் உடையதாகத்தான் இருக்கும்.

இதெல்லாம் கூட பரவால்ல. ப்ரியான்னு பேர் இருக்கிற எல்லாரும் அழகென்றும், 'Priya'ங்கா சோப்ரா கூட அந்த பேராலதான் உலக அழகியா ஆனாங்கன்னு சண்டை வேற. டேய் பிரியங்கா வேற ப்ரியா வேறன்னு சொன்ன ஒருத்தன்கூட ரெண்டுமாசமா, சரக்கு ட்ரீட் தர்றேன்னு சொல்லி ஏமாத்துனவன முறைக்கிறமாதிரி கோபமா லுக்கு விட்டுகிட்டு திரிஞ்சான்.



சரக்குன்னு சொல்லவும்தான் ஞாபகம் வருது. அப்பப்ப பீர் பாட்டில கைல புடிச்சிட்டு அலையுறார் நம்ம திருவாளர் கார்த்திக். இவன்கூட தண்ணியடிச்ச எல்லாருக்கும் இவனோட லிமிட் தெரியும். ஆமா. சரியா "அவ போய்ட்டா மச்சான்"னு ஆரம்பிச்சாலே அத்தோட பீர் ஊத்துறத நிறுத்திருவாங்க. பீ கேர்புல். எங்கயாவது "அவ போய்ட்டா மச்சான்..."னு யாராவது எதிர்பட்டா அது கார்த்திக்காகவும் இருக்கலாம்.