Monday, August 26, 2013

ஊர்சுற்றியின் தாழங்குப்ப பயண அனுபவம்

பொதுவா தென்தமிழகத்தில் இருந்து வரும் எல்லாரும் சென்னைலாம் ஒரு ஊரா பாஸ்?! அப்படின்னு சலிப்பா சொல்றது ஒரு டிரென்ட்டாவே ஆகிடுச்சு. நானும் தென்தமிழகத்தச் சேர்ந்தவன்தான். ஆனா எனக்கும் சென்னைக்கும் புலப்படாத ஏதோவொரு பந்தம் உண்டுபோல.

பஸ் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக்கடந்த பிளாட்பார்மை என்றாவது ஒருநாள் சீக்கிரம் கிளம்பி மெதுவாகக் கடந்தால் அடிமனசுல இருந்து ஒரு சந்தோசம் வருமே, அப்படித்தான் வாரம் முழுக்க பரபரப்பாக இருக்கும் சென்னையை ஞாயிறன்று அதிகாலை சீக்கிரம் எழுந்து சுற்றிவருவதும். பொதுவாக அதிகாலை நேரத்தில் எந்த ஊரும் / நகரமும் அழகு! சென்னை பேரழகு.

இப்படியாக ஒரு ஞாயிறின் அதிகாலை 4 மணிக்கு குளித்துக் கிளம்பி என்னூருக்கு அருகிலிருக்கும் தாழங்குப்பம் பகுதிக்குச் சென்றதைப் பற்றிய பதிவுதான் இது. (அவ்வளவுதானா என நினைப்பவர்கள் இத்தோடு வாசிப்பதை நிறுத்திக்கொள்ளலாம்)

புகைப்படக் கலைஞர்களுக்கு இது ஓர் சொர்க்கபுரி. அப்புறம் ஏன்டா நீ போனன்னு கேட்கக்கூடாது. இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் இருக்கு. கைவசம் 8 MP கேமரா வசதியுள்ள மொபைல் இருக்கு. (இதவச்சுதான் ஊர ஏமாத்திக்கிட்டு இருக்கேன்). உடன் அசல் புகைப்படக் கலைஞர்களான கண்ணனையும் (பிசாசுக்குட்டி என்ற புனைப்பெயருக்கு ஏற்ப ட்விட்டரில் அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு திரிவானே அவனேதான்) தமிழ்க்குமரனையும் (@karpadhu_tamil) அழைத்துக்கொண்டு சென்றாயிற்று. வயசுல சின்னப்பசங்கள சேர்த்துக்கிட்டு ஊர்சுத்துரதுல பலநன்மைகள் இருக்கு. அதைப்பற்றி இன்னொரு பதிவே எழுதலாம். அவ்வ்.

(@karpadhu_tamil & @pisasukkutti)
 
4 மணிக்கு அடையாரிலிருந்து கிளம்பிய நான் மிகச்சரியாக 4.30 மணிக்கு சென்ட்ரல் ஸ்டேசன்ல இருந்தேன். இதுவே பீக் ஹவர்ன்னா அடையாரையே தாண்டிருக்க மாட்டேன். பொன்னியின் செல்வன் படிக்குறப்ப எப்படி ஒரு தனி உலகத்துல பயணிச்சிட்டு வந்தோமோ அதேமாதிரிதான் சென்னை MRTS-ல் பயணிப்பதும். அதை மையமா வச்சு தனி உலகமே இயங்கிக்கிட்டு இருக்கு.

இந்த இடத்துல ஒரு டிப்ஸ் சொல்லியே ஆகணும். சென்னை லோக்கல் ட்ரெயின்ல நெய் பிஸ்கட் என்றொரு பதார்த்தத்தை விற்றபடி வரும் வியாபாரிகளை உங்கள தாண்டிப்போக விட்றாதீங்க. அதுவும் சூடா சிலர் விப்பாங்க. கண்டிப்பா வாங்கி டேஸ்ட் பார்த்திடுங்க. வேற எங்கயுமே இப்படியொரு சுவைல கிடைக்காது. ஸ்ட்ராங்லி ரெக்கமெண்டட்.

ரயில் சன்னலோர இருக்கையில் அமர்ந்தபடி விடியத் துவங்கும் சிவந்த கீழ்வானம் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியை இந்த வார்த்தைகளில் சொல்லமுடியாமல் தவிக்கிறேன் (எஸ்.ராத்தனமா இப்படி சில வார்த்தைகள் எழுதினாத்தான் பதிவு எழுதின திருப்தியே கிடைக்குது. மன்னிச்சு). ஒருவழியா 5.30-க்கு எண்ணூர் சென்றடைந்து ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் தாழங்குப்பத்திற்கு ஷேர் ஆட்டோ கிடைக்காமல் ('போடாங்' என சென்னை பாஷையில் மனசுக்குள் திட்டிக்கொண்டே) பொடிநடையாகவே நடக்க ஆரம்பித்து கடற்கரையை சென்றடைந்தோம்.


தாழங்குப்பம் கப்பல்த்துறையை (Pier) கரையிலிருந்து பார்த்தபோது மரியான் தனுஷாட்டம் 'ஆத்தா' என்று பரவசப்பட்டு 'க்ளிக்க' ஆரம்பித்தோம். கொசஸ்தலை ஆறு வங்காள விரிகுடாவில் கடக்கும் கழிமுகம் என்றால் நமக்கு தெரியாதுதான். இது என்ன இடம்ன்னு புரியும்படியா சொல்லனும்ன்னா 'காக்க காக்க' திரைப்பட கிளைமேக்ஸ் ஃபைட் நடக்குமிடம் இதுதான். தரைதட்டா கடலின் ஆழத்தில் நிற்கும் கப்பலின் சரக்குகளை கரைக்கு கொண்டுசெல்ல உருவாக்கப்பட்டு தற்போது சிதிலமடைந்த எச்சமாக உள்ளது.

உடன்வந்த பசங்க ரெண்டுபேரும் டிஜிட்டல் கேமராவில் புகைப்படம் எடுக்கும்போது கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம, மன்னன் படத்தில் ஓட்டைக்கண்ணாடி அணிந்து சிரிச்சமுகமா இருக்கும் தலைவரைப்போல முகத்தை வைத்துக்கொண்டு என் மொபைலில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். கடற்கரையில் அமர்ந்தபடி சூரியோதயம் பார்ப்பது மழைநேரத்தில் சூடா பஜ்ஜி சாப்பிடறமாதிரி அலுக்கவே அலுக்காத விசயம்.

கொசஸ்தலை ஆறு ஒருபுறம், அது முழுக்க படகுகளில் மீன்பிடிக்கும் மீனவர்கள், அது கலக்குமிடத்தில் கடல்த்துறை, சீறீயபடி அலைகளைக்கொண்ட கடல் என புகைப்பட விரும்பிகளுக்கு ஏற்ற இடம் இந்த தாழங்குப்பம். அதுக்காக பேமிலியோட டூர் போகணும்ன்னு நெனச்சு இங்கவந்தா வேஸ்ட். சுற்றி வேறேதும் கிடையாது.



சிதிலமடைந்த அந்த தூண்களில் ஏறி பாதிக்கடந்தவரை பயமில்ல. சீறிவரும் அலைகளைக் கண்டபோதுகூட பயமில்ல. கீழமுழுக்க பாறைகளால் நிறைந்த கடல் என்றும் ரெண்டுநாள் முன்னாடிதான் ஒருத்தர் தவறிவிழுந்து தவறிட்டார் எனக்கேட்டதும் கைகள் காற்றில் டைப்படிக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடலுக்கு புறமுதுகுகாட்டி கரையை அடைந்தேன். இந்தவிசயம் தெரியாதவரைக்கும் யார்கிட்ட வேணாலும் "பயம்மா?! எனக்கா?!" என பன்ச் விட்டுக்கலாம். அவ்வ்.

சென்ட்ரலிலிருந்து ரிட்டனுக்கும் சேர்த்து எடுத்த டிக்கெட், சாப்பிட்ட டீ மற்றும் பஜ்ஜியை சேர்த்து ஒரு ஆளுக்கு சராசரியாக ரூபாய் முப்பதுக்குள் சீப் பட்ஜெட்டில் பயணம் முடிஞ்சது. சோம்பேறித்தனத்தை ஒதுக்கிவச்சுட்டு முடிஞ்சா ஒருமுறை போய் ரசிச்சுட்டு வாங்க பாஸ்.


3 comments:

  1. Instagram vida un blog la intha photos azhagu Thambi !!!

    ReplyDelete
  2. Photos are awesome ...! Particularly first one... !

    //தாழங்குப்பம் கப்பல்த்துறையை (Pier) கரையிலிருந்து பார்த்தபோது மரியான் தனுஷாட்டம் 'ஆத்தா' என்று பரவசப்பட்டு 'க்ளிக்க' ஆரம்பித்தோம். கொசஸ்தலை ஆறு வங்காள விரிகுடாவில் கடக்கும் கழிமுகம் என்றால் நமக்கு தெரியாதுதான். இது என்ன இடம்ன்னு புரியும்படியா சொல்லனும்ன்னா 'காக்க காக்க' திரைப்பட கிளைமேக்ஸ் ஃபைட் நடக்குமிடம் இதுதான்.//

    ஹா ஹா ... செம்ம செம்ம .... !

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...