Tuesday, May 29, 2012

அண்ணா நூற்றாண்டு நூலகம்


தலைப்பை பார்த்ததும் எங்களுக்கு தெரியாததா? நல்லாத் தெரியுமேன்னு நீங்க நினைக்கலாம். ஆனால் உண்மையில் நாம் அறியாத பல பொக்கிசங்களையும் சிறப்புகளையும் தன்னோடு கொண்டுள்ளது இந்நூலகம்.



பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைத்த நாள்முதல், உடனே சென்றாக வேண்டும் என்று ஒன்னரை வருடங்கள் காலம் தாழ்த்தியதற்காக  என்னை நானே ஆள் வைத்து அடிக்கவேண்டும்.

ஒருவழியாக நானும் குணா மாம்ஸும் கடந்த ஞாயிறன்று செல்வதென முடிவெடுத்து, சென்றும் விட்டோம்... பொதுவாக டாஸ்மார்க் அல்லது ட்வீட்-அப் செல்ல இருப்பதாக யாராவது ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டால் வண்டியில் தானாய் ஏறி வரவிருப்பதாக பலர் விருப்பம் தெரிவிப்பர். நூலகம் செல்வதாய் நாங்கள் போட்ட ஸ்டேட்டஸிற்கு ஒரு ரிப்ளை கூட வரல. நாம சேர்த்து வச்ச கூட்டம் அப்படி.

ஒன்பது தளங்களுடன் (தரைத்தளத்தையும் சேர்த்து) பிரமாண்டமாய் எங்களை வரவேற்றது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நூலகமான அண்ணா நூற்றாண்டு நூலகம். உள்ளே நுழைந்ததும் காத்திருந்தது எங்களுக்கு அதிர்ச்சி. முழுக்க குளிர்சாதன வசதியுடன் நாங்கள் நுழைந்தது ஏதோ ஸ்டார் ஹோட்டல் போன்றதொரு பிரம்மை. ஒவ்வொரு தளமும் அ & ஆ என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

பூந்தோட்டத்தில் நடைபோடும்போது நம் கைகள் எப்படி தன்னிச்சையாக பூக்களை வருடுமோ அப்படியே எங்கள் கைகள் ஒவ்வொரு நூலையும் வருட ஆரம்பித்திருந்தன. நூலகமெங்கும் அமைதியும் புத்தகத்தின் ஏகாந்த வாசனையும் நிரம்பியிருந்தது.

தரைத்தளம் :

ப்ரெய்லி பகுதி :


கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் - (கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்) என்ற குறளுக்கேற்ப
தரைத்தளத்தில் கண் பார்வையற்ற சகோதரர்களுக்காக "ப்ரெய்லி" பகுதி அமைக்கப்பட்டுள்ளது.




சொந்த புத்தகங்கள் பகுதி :

சொந்த புத்தகங்களைக்கூட எடுத்து வந்து படிப்பதற்காக சொந்த புத்தக பகுதி தரைத்தளத்தில் உள்ளது. புத்தகங்களை கொண்டு வந்து அனுமதி பெற்று பின் இங்கு வைத்து படிக்கலாம்.

முதல் தளம் :


குழந்தைகள் பகுதி:

சென்றிருந்த இருவரும் வெகு சமீபத்தில் குழந்தை பருவத்தை கடந்திருந்தபடியால் உள்ளே செல்ல அனுமதியில்லை (சரி சரி... திட்டாதீங்க). ஆதலால் வெளியிலிருந்து வேடிக்கை பார்த்துவிட்டு வந்தோம். குழந்தைகளுடன் வரும் பெற்றோர்களுக்கு அனுமதி உண்டு. குழந்தைகளை கவர்வதற்காக கதை சொல்லும் CD & DVD என மல்டிமீடியா அம்சங்கள் நிறைந்ததாய் காணப்படுகிறது இப்பகுதி.


பருவ இதழ்கள் பகுதி :


இங்கதான் நாங்க கொஞ்சம் ஸ்லிப் ஆயிட்டோம். பருவ இதழ்கள் பகுதின்னா "அந்தமாதிரி" பகுதின்னு நெனச்சு உள்ள போய் ஏமாந்தோம். அது வார & மாத இதழ்கள் நிறைந்த Periodical Section-ஆம். பெருத்த ஏமாற்றத்தோடு வெளியே வந்தோம்.

இரண்டாம் தளம் :


தமிழ் பகுதி :


அடடே... தமிழின் இலக்கணம் முதல் வானவியல் வரை ஒரு லட்சம் புத்தகங்கள் நிறைந்த பகுதி இது. ஈழம் பற்றிய "முறிந்த பனை" உட்பட ஏராளமான புத்தகங்கள் நிறைந்த பொக்கிசம் இப்பகுதி. (தமிழர் வரலாற்றை பற்றிய ஆய்வு நூலான தொ.பரமசிவம் அவர்கள் எழுதிய "பண்பாட்டு அசைவுகள்" புத்தகம் இப்பகுதியில் இல்லாதது சிறிய ஏமாற்றம்)

தமிழ் இலக்கியப்பகுதி :


இங்குதான் நாங்கள் அதிக நேரத்தை செலவிட்டோம். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என பகுதிவாரியாக பிரிக்கப்பட்டு இருந்தது. இலக்கியதாகம் உள்ள எவரும் இங்கு திகட்ட திகட்ட தாகம் தீர்க்கலாம். அங்கு வைத்தே பின் நவீனத்துவத்தின் ஆரம்பமாக கருதப்படும் சாரு எழுதிய "எக்சிஸ்டென்ஷிலியசமும் ஃபேன்சி பனியனும்" நாவல் படித்துமுடித்தோம். தயவு செஞ்சு கதை மட்டும் என்னன்னு கேக்காதீங்க. சத்தியமா சொல்ல தெரியல. (இருந்தாதானே சொல்றதுக்கு).

இலக்கிய தாகம் கொஞ்சம் தீர்த்த களைப்பில் கேண்டீன் நோக்கி கீழே வந்தோம். நல்ல ஸ்ட்ராங் & கசப்பான காபியுடன் அமர, அழகான பதுமைகள் இருவர் எங்கள் முன் வந்தமர்ந்தனர். அதுவரை கசந்திருந்த காபி தேனாய் இனிக்கத் தொடங்கியிருந்தது. இதுக்குமேல இங்க இருந்தா தபு சங்கர் மாதிரி கவிதை எழுதவேண்டியிருக்கும் என்று அவ்விடத்தை விட்டு தடாலடியாக கலைந்து சென்றோம்.


மூன்றாவது தளம் :


ஆங்கிலப் பகுதி :


தமிழுக்கு அடுத்துதான் ஆங்கிலம் என்று சொல்லாமல் சொல்வதுபோல் தமிழ் நூல்கள் அடங்கிய தளத்திற்கு மேல் ஆங்கில நூல்கள் பகுதி அமைக்கப்பட்டுள்ளது அனைத்து புத்தகங்களும் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைக்கிறது. ஆங்கிலம் இருக்குற இடத்தில் எங்களுக்கென்ன வேலை என்று வெளிநடப்பு செய்தோம்.

நான்காவது தளம் :


Economics, Law, Education, Language & Lignuistics, Literature, Folklore & Public Administration ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இப்பகுதியில் கிடைக்கிறது. நிறைய கல்லூரி மாணவர்களை இப்பகுதியில் காணமுடிந்தது.

ஐந்தாவது தளம் :


Mathematics, General Science, Astronomy, Physics, Chemistry etc., ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இங்கு வாசிக்க கிடைக்கிறது

ஆறாவது தளம் :


Engineering, Agriculture, Accounting, Architecture etc., ஆகிய துறை சார்ந்த புத்தகங்கள் இங்கே வாசிக்க கிடைக்கிறது. (இன்னொரு கவனிக்கவேண்டிய விசயம் என்னன்னா இந்த பகுதியில்தான் கேண்டினில் பார்த்த அந்த பெண்கள் படிக்க நுழைந்தனர். ஹி ஹி...)

ஏழாவது தளம் :


வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆம் இப்பகுதி வரலாற்று நூல்கள் அடங்கிய பகுதி. ஓலைச்சுவடிகள் அடங்கிய பகுதி பார்வைக்காக திறக்கப்படவில்லை. இன்னொரு புறத்தில் ஐரோப்பா, இந்தியா, உலகம் என பகுதிவாரியாக வரலாற்று நூல்கள் பிரிக்கப்படிருந்தன.

சுவாரசியமான சில தகவல்கள் :


நுழைவு வாயிலில் அறிஞர் அண்ணா தன் மடியில் புத்தகம் ஏந்தி படிப்பது போன்றதொரு சிலை. நூலகத்துக்கு ஏற்ற இச்சிலை வடிவைமத்தவருக்கு ஆயிரம் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.

நூலக நேரம் - காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை செயல்படுகிறது. சொந்த நூல்கள் பகுதியில் படிப்பவருக்கு மட்டும் இரவு 9 மணிவரை அனுமதி.

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மின் நூல்கள் அடங்கியுள்ள இந்தியாவின் முதன்மையான டிஜிட்டல் லைப்ரரி இது.

தங்களுக்கு தேவையான நூல்களை கண்டறிவதற்கு வசதியாக தரைத்தளத்தில் நுழைந்ததும் ஒரு லேப் டாப் உள்ளது. இதில் நாம் தேடும் நூல் எந்த தளத்தில் எந்த பிரிவில் உள்ளது என்பதுட்பட தகவல் கிடைக்கிறது. நம் தேடுதல் சுமை இதன்மூலம் குறைகிறது.

சொந்த நூல் பகுதிக்கு புத்தகம் கொண்டு செல்ல விரும்புவோர் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும்.

Radio Frequency Identification - சுருக்கமாக RFID எனப்படும் வசதியும் ஒவ்வொரு தளத்திலும் CCTV கேமராக்களும் இருப்பதால் புத்தகத்தை ஆட்டைய போடமுடியாது என்பது இந்நூலகத்தின் சிறப்பு (வட போச்சேன்னு ஃபீல் பண்ணா நீயும் என் நண்பனே... அவ்வ்)

அனைத்து தளங்களும் குளிரூட்டப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பு. வெயிலுக்கு இதமா இருக்குதுங்கோ... அமர்ந்து படிப்பதற்காக குஷன் இருக்கைகள், வெளிச்சமான இடம் என்று புத்தக வாசிப்பாளர்களின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.

கான்பரன்ஸ் ஹால், ஆம்பிதியேட்டர், 200 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள ஆடிட்டோரியம் என நிறைய வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இங்குதான் ஹிலாரி கிளிண்டன் சென்னை வந்தபோது மீட்டிங் நடைபெற்றது.



தங்கள் இருசக்கர & நான்கு சக்கர வாகங்கள் பார்க்கிங் செய்ய அருமையான இடவசதி உள்ளது.

பராமரிப்பு முறையைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஆங்காங்கே காவலர்கள், ஒவ்வொரு ரேக்காக சுத்தம் செய்யும் துப்புரவாளர்கள், கலைந்து கிடக்கும் நூல்களை அடுக்கும் பணியாளர்கள் என்று அருமையான பராமரிப்பு. எப்படியிருக்குமோ என்று தயங்கி தயங்கி ரெஸ்ட் ரூமில் நுழைந்தால் சத்யம் தியேட்டர் போன்றதொரு தூய்மை. பணியாளர்கள் அனைவரையும் பாராட்டியே ஆக வேண்டும்.

நூலகத்தில் புகைப்படம் எடுக்க அனுமதியில்லை. ஆனாலும் ஆங்காங்கே சிலர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ளே நுழையும்போது தங்கள் பெயர் மற்றும் கையெழுத்து இடவேண்டும். சரித்திரத்துல நம்ம பேர் வரவேண்டாம்? அதுக்காகத்தான் இந்த ஏற்பாடு போல. அனைத்து தளங்களிலும் லிப்ட் வசதி உள்ளது.

மாணவர்கள் இங்கு தங்கி நூல்களை ஆய்வு செய்யும் வகையில் இங்கு தனியறை வசதிகள் உள்ளன. இதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.

தற்போதைக்கு குழந்தைகளுக்கு மட்டுமே இந்நூலகத்தில் உறுப்பினர் ஆக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விரைவில் அனைத்து தரப்பினருக்கும் இவ்வசதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சில மனக்குறைகள் :


இத்தனை வசதிகள் இருந்தும் நம் மக்கள் (என்னையும் சேர்த்து) இந்நூலகத்தை இன்னும் சிறப்பாக பயன்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது .
நூலகம் முழுவதும் பெயர்ப்பலகை உட்பட தூய தமிழில் உள்ளதால், மற்ற மொழி மக்கள் அடையும் கஷ்டத்தை கண்கூடாக பார்க்க முடிந்தது.

அவ்வளவு பெரிய நூலகத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கேண்டீன் மிகச்சிறியது. ஒருவேள கொஞ்சபேர்தான் வருவாங்கன்னு முன்னமே தெரிஞ்சுருக்குமோ?

இந்நூலகத்தை மருத்துவமனையாக மாற்ற நினைக்கும் தமிழக முதல்வரின் முடிவு அடுத்த வருத்தம். ஒரே ஒருமுறை இந்நூலகத்தை வந்து பார்வையிட்டால் உங்கள் எண்ணத்தை நீங்களே மாற்றிக் கொள்வீர்கள் முதல்வரே. என் ஆட்சியில் நிர்ணயித்தது என்று பெருமைப்படுவதற்குப் பதிலாய் என் ஆட்சியில் நூலகத்தை மாற்றவில்லை என்ற பெருமை உங்களை வந்தடையும். அத்தகைய அளவில் வசதிகள் நிறைந்துள்ளது இந்நூலகம்.

இனி வாரந்தோறும் ஞாயிறன்று இங்கு ஆஜர் ஆவதென்று முடிவெடுத்து விட்டேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு இல்லையா நண்பர்களே...

நூலகம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த லிங்கை சொடுக்கவும் :
Anna Centenary Library

7 comments:

  1. அருமை..அட்டகாசம்..
    ஒரு இடத்துக்குப் போயிட்டு வந்ததைப்பத்தி எழுதணும்'ன்னா (என்னை மாதிரி மொக்கை போடாம(!)) இப்படித்தான் எழுதணும்..
    நிறைய பயனுள்ள தகவல்கள்.. உடன்வந்த வந்த எனக்கே சில தகவல்கள் புதியவை.. நிறைய இணையத்துல தேடி, ரெபர் பண்ணி எழுதியிருக்கே..
    வாழ்த்துக்கள் மாப்பி..

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்களுடன் நல்லதொரு பதிவு.

    ReplyDelete
  3. thanks for visiting and posting,

    naalu peru padichittu vanthaanga naa innum santhosam. sundays usuala kottam irukum. Keep visiting.. so glad to c the post..

    raga

    ReplyDelete
  4. நல்ல வேல , நான் கவிதையோன்னு நெனச்சு மெர்சலாயிட்டன் . அருமை மாம்ஸ் :))

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...