Tuesday, May 15, 2012

என்னை தொலைத்த நான்


#TNMegaTweetUp ல் நான் வாசித்த கவிதையெனும் கட்டுரை. உங்கள் பார்வைக்காக. முதன்முறை மேடை ஏறி மைக் பிடிப்பதால் என்னுள்ளே பதட்டம் இருந்தது. அதனால் நயம்பட என்னால் வாசிக்க முடியவில்லை என்பது எனக்கே தெரியும். ஆயினும் இடையிடையே ரகளை செய்தது எனக்கே ஆச்சர்யம்.

ஒரிரு நாட்களாய் என்னை

கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

என் வீட்டின் கதவு திறந்ததும்
எதிர்வீட்டின் கதவு
தயக்கத்தோடு அடைக்கப்பட்டது

அலைபேசியில்... வராத அழைப்பிடம்
பேசுவதாக பாசாங்கு செய்தபடியே
என்னை பதட்டத்தோடு கடக்கிறார்
பக்கத்து ஃப்ளாட் "ரகு" அண்ணா

தொலைவில் இருந்தால்
முத்தத்தை பறக்கவிட்டும்
அருகிலிருப்பின்
காதோரம் "இச்" என்ற
சத்தத்தோடும்
முத்தம் தரும் "வித்யா குட்டி"
என் எதிர்வந்தும்
அவள் தாயின் இறுகப்பற்றிய
அரவணைப்போடே
ஏற்றப்படுகிறாள்
பள்ளி வண்டியில்

சமீப காலமாய்
புன்னகையும் வெட்கமும் கலந்து
காதல் பார்வை வீசிய
எதிர்வீட்டு குமரியை
காணவே முடிவதில்லை

என் முன்னே பேச்சை மறந்து
பின் சென்றதும் குசுகுசுப்போடு
பேசும் சிலரின் சத்தமும்
காதில் கேட்டது

கார்த்திக் என்ற என் பெயரை
"காத்திக் சாப்" என
மொழிமாற்றம் செய்து
விளிக்கும் கூர்க்காகூட
"நமஸ்தே"வை மறந்துவிட்டு
ஏளனப் பார்வை ஏந்தி
என்னை எளிதாய்
கடந்து சென்றான்

இப்படியாக கடந்து செல்லும் அனைவரின்
நடவடிக்கையிலும்
சிற்சில மாற்றங்கள்
காண்கிறேன் நான்

ரயில்நிலையம்போல்
எப்போதும் சலசலத்திருக்கும்
கையேந்திபவனும்
எனை கண்டதும்
சலசலப்பு அடங்கி
மயான நிசப்தத்தை
தற்காலிகமாய் கடன்
வாங்கியிருந்தது

குழப்பத்தினூடே அலுவலகம்
சென்று அலுவல் முடிந்து
மாலை மீண்டும் விரைந்தேன்
என் குடியிருப்பை நோக்கி

நான் சென்றுசேர்ந்ததும்
வந்து சேர்ந்தது
"குடியிருப்பு செயலாளரின்" அழைப்பு

என் வணக்கத்தோடும்
அவர் வரவழைத்திருந்த தேநீரோடும்
இனிதாய் ஆரம்பித்தது
எங்களின் சந்திப்பு

(பேச்சில் தேர்ந்த அவர்
சந்திப்பு ஆரம்பித்த கணம்தொட்டே
என் தலையின் மேல்
ஆணியை வைத்து அடிக்கத்
தொடங்கியிருந்தார்)

இனிதாய் ஆரம்பித்த எங்களின் சந்திப்பு
"உங்க ஃப்ளாட் ஓனர்கிட்ட பேசிட்டேன்.
எப்ப ஃப்ளாட்டை காலி செய்கிறீர்கள்?"
என்ற அவரின் கேள்வியோடு
முடிவுக்கு வந்தது

ஏன் இத்தனை மாற்றங்கள்
என்ற காரணம்
சற்று தாமதமாகவே
தெரிய வந்தது

தெரியவந்த கணம் அதிர்ந்தேவிட்டேன்

அண்மையில் பெய்த அடைமழையில்
கிராமத்து நினைவில் நான்
குதித்து நனைந்ததை
கண்ட சிலபேர்
என் மனநிலை குறித்து
எழுப்பிய சந்தேகங்களே
அனைத்தின் காரணமென்று
தெரியவந்தது

ஆம் எனக்கு "சைக்கோ"
என்று பெயரும்
வைத்திருந்திருக்கிறார்கள்

நான்கு சுவற்றுக்குள் "ஷவரின்" கீழ்
குளிப்பதென்பது மழைக்குளியல் அல்ல என்பதை
எப்படி புரியவைப்பதென தெரியவில்லை
நகரத்து மக்களுக்கு

மழைநீர் சேகரிப்பு தொட்டியில்
சேகரிப்பதென்றும்
மறுநாள் காலையில்
சாலைநிரம்பி போக்குவரத்து
நெரிசலாகும் என்ற அளவுக்கே
மழையை பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள்
நகரத்து மக்கள்

மழை குறித்த தவறான புரிதலை
எண்ணி கொட்டித்தீர்க்கிறது
மேகமும் மழையாய்...

யாரேனும் சொல்லுங்கள்
மழையில் நனைவதென்பது
அத்தனை பெரிய
குற்றமா நகரத்தில்???

4 comments:

  1. எல்லா மழைத்துளியும் எல்லோருடைய மனதையும் நனைப்பதில்லை, இங்கே தலை முடியின் ஈரம் கூட ஹீட்டர் கொண்டே உலர்த்தப் படுகிறது..

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...