Thursday, June 21, 2012

என் வாசிப்பனுபவம் :


‘மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர் இறக்கவேண்டும்’ இந்த வரியை இங்கு எழுதியதற்கான காரணத்தை இறுதியில் சொல்கிறேன். குளத்தில் கிடக்கும் கல்லைப்போன்று சில நாட்களாக என்னுடைய அலமாரியில் தூங்கிக் கொண்டிருந்த சில புத்தகங்கள் என் மனதில் உறுத்திக் கொண்டிருந்தன.

ஒவ்வொரு முறை ஷெல்ப்பை திறக்கும்போதும் அவை என்னை ஏக்கத்துடன் பார்ப்பதுபோலவே எனக்குள் பிரம்மை. தூக்கமில்லாத என் இரவுகளில் நான் நாடுவது இரண்டே விசயங்கள். ஒன்று இசை மற்றொன்று புத்தகங்கள். இந்த இரவு நான் தேர்ந்தெடுத்தது புத்தகங்களை. இரண்டு புத்தகங்களை படித்து முடித்துவிட்டேன்.

ஊமைச்செந்நாய் :

பிற தமிழ் எழுத்தாளர்களை படித்த அளவுக்கு எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துக்களை படிக்காதது வெகுநாட்களாய் என்னுள் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தது. அதை தீர்ப்பதுபோல் வந்து சேர்ந்தது அவரின் ஊமைச்செந்நாய் சிறுகதைகள் தொகுப்பு. முதல் சிறுகதையான "காடன் விளி" என்னுள்ளே பல கேள்விகளை எழுப்பியிருந்தது. மேஜிக்கல் ரியாலிசம் நிறைந்த கதை இது.

விசயத்துக்கு வருவோம். அடுத்துதான் புத்தகத்தின் தலைப்பான "ஊமைச்செந்நாய்" என்ற பெயரில் அமைந்த நெடுங்கதை படித்தேன். ஏற்கனவே ஜெயமோகனின் சிறந்த படைப்பு இது என அறிந்திருந்தமையால் பல்வேறான எதிர்பார்ப்புகள் கிளம்பியிருந்தது.



அசத்தலான எழுத்துநடை. இந்த ஒரு நெடுங்கதை மூலமாகவே என்னுள் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார் ஜெயமோகன்.

ஊமைச் செந்நாய் என்ற அடிமை, வில்சன் துரை, தோமா, சோதி, காட்டு யானை என்ற ஐந்தே கதாபாத்திரங்களால் முப்பது பக்கத்திற்கு கதை சொல்லியிருக்கிறார். கதை ஊமைச்செந்நாயின் கோணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கதை ஆரம்பித்த கணமே நாம் காடுகளில் சுற்றித்திரிய ஆரம்பித்துவிடுகிறோம்.

ஊமைச்செந்நாய் என்பது அதிகம் வாய் திறந்து பேசாத சிவந்த கண்களை உடையதால் அவனுக்கு ஏற்பட்ட பெயர். அவன் எண்ணமெங்கும் காடுகள் மட்டுமே. அனைத்து செயல்களையும் அவன் காட்டுடன் மாட்டுமே ஒப்பிடுகிறான். உதாரணத்திற்கு, பெண்ணுடன் புணர்ந்த காட்சியை கூட அவன் மானை வேட்டையாடி கொல்லும் காட்சியில் ஒப்பிட்டு பார்க்கிறான். அவனுக்கு காட்டின் அனைத்து அசைவுகளும் தெரிந்திருக்கிறது.

ஆங்கிலேய துரை அடிமைகளை நடத்தும் விதமும்... காடுகளில் வேட்டைக்கு செல்லும்போது பயன்படுத்தும் உத்திகளும் நம் புருவங்களை உயர்த்த செய்கின்றன.

துரையை பொறுத்தவரை அவன் அடிமை தன் உடைமையை தொடுவதைக்கூட அவன் வெறுக்கிறான். அடிமை ஒருவன் ஆங்கிலம் பேசுவதைக்கூட கசப்பான கண்களால் காண்கிறான். ஊமைச்செந்நாய் மேல் அதீத துவேசம் கொண்டு அவனை கொல்வதை கூட விரும்புகிறான். அவன் ஏன் அடிமைகள் மேல் இவ்வளவு வெறுப்பாக அலைகிறான் என்பதன் மனவியல் அசத்தல்.

இந்த நெடுங்கதையின் அத்தனை நாடியும் கடைசியில் அமைந்த இரண்டு சிறிய பத்திகளில்தான். இறுதிக்காட்சி நம்மை உலுக்குகிறது. தன்னை வெறுக்கும் துரையை இதைவிட வேறு எவ்விதமாகவும் பலி வாங்கிவிடமுடியாது.

படிக்க ஆரம்பிங்க. காட்டுக்குள்ள உலா போயிட்டு வந்த திருப்தி கிடைக்கும்.

இக்கதையில் வரும் சில முக்கிய வசனங்கள்:




இக்கதையின் லிங்க் : ஊமைச்செந்நாய் (ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இருந்து)


மதினிமார்கள் கதை :

எழுத்தாளர் கோணங்கியின் முத்திரை சிறுகதை. கதை சாத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட என் கிராமத்தையும் என் பால்யத்தையும் கண்முன் கொண்டுவந்து விட்டது.

கதை நாயகன் செம்பகம் (செண்பகம் என்பதை அப்படித்தான் கூப்பிடுவாங்க). சிறுவயதில் வசித்த தெருவுக்கே செல்லப் பிள்ளையாக இருந்த அவன் சந்தர்ப்பவசத்தால் நகரத்துக்கு ஓடி வந்துவிடுகிறான்.

தாயில்லா பிள்ளையான செம்பகத்தை அந்த கிராமத்தில் உள்ள கன்னிகள் அனைவரும் செல்லமாக வளர்க்கிறார்கள். அனைவரையும் மதினி (அண்ணி) என்றுதான் அழைக்கிறான். ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு வாசம் இருப்பதைப்போல ஒவ்வொரு மதினிக்கும் ஒவ்வொரு குணம். ஆனாலும் இவன்மேல் பாசம் வைப்பதில்மட்டும் அனைவரும் சமம்.

அனைத்து மதினிகளும் இவனை "என்ன கட்டிக்கோ" என சொல்லி கிண்டலும் கேலியுமாக வளர்க்கிறார்கள். தன் தந்தையும் இறந்தபின்னர் கிராமத்தை விட்டு ரயிலேறி நகரம் வந்த செம்பகம் சில ஆண்டுகள் கழித்து தன் கிராமம் நோக்கி வருகிறான்.

வந்து பார்த்தால் அதிர்ச்சி. அவன் வாழ்ந்திருந்த கிராமம் தன் சுயத்தை இழந்திருந்தது. எந்த மதினியும் இவன் கண்ணில் படவில்லை. அனைவரும் வாக்கப்பட்டு போயிருந்தனர்.

இவனை அடையாளம் காண யாருமே இல்லாமல் தனித்து விடப்பட்ட அவன் தலையில் கைவைத்து கண்கலங்கி ஒரு ஓரத்தில் அமர்கிறான்.

நாளைக்கு மீண்டும் ஓடிப்போன செம்பகமாய் நகரப் பெருஞ்சுவர்களுக்குள் மறைந்து போவான் என்றவாறாக கதை முடிகிறது.


டிஸ்கி : முதல் வரியான ‘மறுபடியும் பிறப்பதற்கு முதலில் ஒருவர் இறக்கவேண்டும்’ என்பது சல்மான் ருஷ்டியின் மிகப்பிரசித்தி பெற்ற ஆரம்ப வரி. என்னோட கட்டுரையை எப்படி ஆரம்பிக்கறதுன்னு தெரியல. அதான் இதை எழுதி ஒருவழியா ஆரம்பிச்சுட்டேன். ஹா ஹா...

10 comments:

  1. உலோகம் லைட்டா குழப்பியதில் ஜெமோ நமக்கு புரியப்போவதில்லை என்கிற முடிவுக்கு வந்தாச்சு.. உங்களது இந்த பதிவு வாங்கலாமா ன்னு யோசிக்க வைக்குது..

    ReplyDelete
  2. புத்தகத்தை குடுடா, படிச்சிட்டு தாரேன்!

    ReplyDelete
  3. Replies
    1. நன்றி. உங்கள் வாழ்த்து என்னை மென்மேலும் வளரச்செய்யும். :-)))

      Delete
  4. அருமையான அறிமுகங்கள் தங்க்ஸ்.மதினிமார் கதை எனக்குப் புதுசு.உங்களோட எளிய வரிகளில் முழுமையா வாசிச்ச திருப்தி தருது.மதினிகள் மட்டுமல்ல செம்பகமும் நவீன சூழலில் அருகி விட்டதாகத் தான் தோணுது.ஊமைச் செந்நாயை விட அந்த தொகுப்பில் மத்தகம் எனக்கு பிடிச்சிருந்தது.காடன் விளி குறித்து நீங்க தொடர்ந்து பேசுபதை பார்க்கையில் தனி பதிவொன்று வருமென தோன்றுகிறது.ஆனா அதை யதார்த்த கதையாக அணுகினால் புதிய வாசிப்பொன்றுக்கு இடம் இருக்கிறது.

    தொடர்ந்து வாசிப்பீர்கள் பகிர்வீர்கள் எனப் படுகிறது.கலக்குங்க தங்க்ஸ்!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி. காடன் விளி பற்றி பதிவெழுத ஆசைதான். மீண்டுமொரு முறை படிச்சுட்டு முயற்சி பண்றேன். :-))

      Delete
  5. Arumai Karupu, you have same starting problem, keep writing.

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...