Monday, April 16, 2012

காதலிக்கு ஒரு கடிதம் :

இருபத்திமூன்று அகவை
உனக்காய் காத்திருந்த என் மனம்
உன்னைக்கண்ட அந்த நொடியில்
கவலைகள் தீர்ந்து ஆர்ப்பரித்ததை
எப்படி சொல்வதென புரியவில்லை?

எதற்காக புரிய வைக்கவேண்டும்?
அதே நிகழ்தல் உனக்குள்ளும் நடந்திருக்கும்
உண்மைசொல் பெண்ணே...

உன்னை நான் பிரிந்திருந்த வேளையில்
என்னை கடந்து சென்ற
குளிர்காற்றும் என்மேல்
அனலை கக்கியபடி சென்றது

உனைத்துரத்தியது நானா? - அல்லது
என்னைத்துரத்த வைத்தது நீயா?
என்ற கேள்விக்கு...
கடைசிவரையில் பதிலில்லை என்னிடத்தில்
ஆயினும் - உன் ஒற்றைப் புன்னகைக்காய்
உன் காலடி பதிந்த வீதியில்
என் காலம் முழுக்க
சுற்றிவர ஆயத்தமானேன்...

ஒருநொடிதான்... ஆனாலும்
நீ சிந்தும் கடைவிழிப்பார்வைக்காக
தெருவை நீ கடக்கும் வரை
உன்னைப் பின் தொடர்ந்தேன்

நீ கடந்த பின்னும்
அந்த நொடி
என் நினைவில் கடக்காமலிருக்க
மீண்டும் மீண்டும்
நினைவுபடுத்திக்கொண்டிருந்தது
என் மனம்

என் மூளைக்கும் இதயத்திற்கும்
அடிக்கடி பிணக்குகள் வருவதுண்டு...
உனக்கேற்றவன் நானல்ல
இது மூளையின் சொல்...
உனக்கே உனக்கென உருவானவன் நான்
இது இதயத்தின் சொல்...
இப்போது புரிகிறதா? நான் ஏன்
இதயத்தின் சொல்லையே
கேட்கிறேன் என்று...

என்னால் வானவில்லை வளைக்கவோ
மலையை பெயர்க்கவோ இயலாது
ஆயினும் என்னையே உனக்காகத்
தர இயலும் - ஆனால் நீ மறுக்கிறாய்...

நீ மறுப்பது என்னையா? அல்லது என் காதலையா?
இரண்டும் ஒன்றுதான்...
என் கவிதைகள்கூட உன்னை
காதலிக்க ஆரம்பித்துவிட்டது...

நான் உன்னைத்துரத்துவது என் காதலை - நீ
ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அல்ல...
என்னைவிட உன்னை யாரும்
இவ்வளவு நேசிக்கமுடியாது என்பதை
நீ தெரிந்துகொள்ளத்தான்

அது சரி... பெண்களுக்கு தெரிந்தும் தெரியாததுபோல்
இருப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ?

என்றும் அன்புடன்,
என்றாவது ஒருநாள் என் காதலை
நீ ஏற்றுக்கொள்வாய் என்ற நம்பிக்கையுடன்
"காதலை காதலிக்கும்"
அன்பு உள்ளம்.

2 comments:

  1. "என் கவிதைகள்கூட உன்னை
    காதலிக்க ஆரம்பித்துவிட்டது..."அழகான வரிகள்

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...