Saturday, March 17, 2012

கண்ணீரில் கரைந்த காதல்...



பள்ளியில் விழி பரிமாறி காதல் கொண்டு...
விடுமுறைகளின் தனிமையை வெறுக்கையில்
விமானங்களின் ஆக்கிரமிப்பு தொடங்கியது

பெண்டு என வாசல் தாண்ட
கட்டுப்பாடிட்ட குடும்பம்
குடிபெயந்தது வீதிக்கு...
பதுங்கு குழிக்கு பள்ளி இடம் மாறினாலும்,
உன் பார்வை கதகதப்பில் பாதுகாப்பாய்தான் உணர்ந்தேன்!

விண்ணில் விண்மீன்கள் எண்ணி கொண்டிருந்த - ஓர் இரவு
வீழ்ந்தன நெருப்பு பிழம்புகள்...
இருநூறு குடும்பம் வாழ்ந்த ஊரில்
இரண்டு நிமிடங்களில் இருநூறு பேர் கூட எஞ்சவில்லை...

ஊறவுகூடி பூ சொரிந்து உன் கரம் பற்ற எண்ணிய நான்
அனாதையாய் உன் கை சேர்ந்தேன் செல் (shell) தூறலில்...

உயிருக்கு உத்திரவாதம் இல்லா நிலையில்
உன் உயிரான என்னை காப்பாற்ற முனைந்தாய்,
என் உயிரான உன்னை மறந்து,
கப்பலேறி கச்ச தீவு போகச்சொன்னாய்
கணாளா உன்னை பிரிந்து...

எதிர்த்து பேசயிலலாததால் ஏறினேன்
தாய் புதைந்த தாய் நாட்டை விட்டு

கயவரின் பார்வை மேல் மேயும்பொழுதெல்லாம்
போர்த்தி கொண்டேன் உன் பார்வையை

கடைசி மூச்சாய் கடலில் கரைய எண்ணியவளை
கருணையின்றி கரை சேர்த்தாள் கடலன்னை,
சஷ்டி கவசம்போல் வாய் உன் பெயரை முனங்க
அரை மயக்கத்தில் அடைப்பட்டேன் அகதி முகாமில்...

நாட்டை காக்ககொண்ட உறுதியில்
நங்கைக்கு தந்த உறுதியை மறந்தாய்
அணுகணமும் பிரியேன்னென...

மஹாராணியாய் உன்னுடன் வாழ வேண்டியவள்
மிருகமாய் நடத்தபடுகிறேன் இங்கு,
தனிமையில் நின் நினைவுகளை புரட்டிபார்த்து புரட்டி பார்த்து
நைந்து போனது அதுவும் இங்கு அடைபட்டோர் மனம்போல்...

பகலிரவு பாராமல் என்னுள் எழும் ஒரே கேள்வி
பதுங்கு குழியில் பிணங்களுக்கிடையே
உன் அரவணைப்பில் ஒளிந்திருந்த இரவு
ஏன் பிரியவில்லை என் உயிர்?

எழுதியவர் : S. சந்தோஷ்
ட்விட்டர் முகவரி : @_santhu

Monday, March 12, 2012

அழகி


உன் கூந்தல் மல்லிகை உணர்த்தியது நீ மதுரையென...
நான் உணர்ந்தேன் உன் விழிகள் - மதுவென...

வர்ணிக்க வார்த்தையில்லை
புருவங்களின் கண்மையைவிட
கருமையான உன் விழிகளை

சூரியனுக்கு சுண்ணாம்பு இடுவது போலத்தான்
சிவந்த உன் உதடுக்கு சாயமிடுவதும்
உன் உதடு சிவக்க சாயம் தேவைதானா?

உன் சிரிப்பையும் அநேகமாக
சத்தமாகவே வெளிப்படுத்துகிறாய்
உனைப்போலவே ஒளிவுமறைவின்றி

வெட்கப்படுவதாய் சிலநேரம்
நீ வெட்கப்படும்போது
வெட்கமும்... வெட்கப்படுகிறது

சிலசமயம் இருளிலும் "அழகி" நீ...

(குறிப்பு: இந்த கவிதைக்கு இரு அர்த்தங்கள் உள்ளன. பொதுவாக படிக்கும் எவருக்கும் இது ஒரு அழகிய பெண்ணை வர்ணிப்பதுபோன்றே இருக்கும். ஆனால் இதன் மற்றொரு அர்த்தம் இது முற்றிலும் ஒரு விலைமகளை பற்றிய வர்ணனை. விலைமகளைப் பொருத்திப்பார்த்து படித்துப்பாருங்கள் உண்மை புரியும். கடைசி வரியான இருளிலும் அழகி நீ என்பதுகூட அவள் ஒரு "அழகி" என்பதை குறிக்கும்)

Sunday, March 4, 2012

அரவான்

அரவான் - "நல்லா வருவான்" - திரை விமர்சனம் (மாதிரி)

Blog வச்சிருந்தா ஒரு படத்துக்காவது விமர்சனம் எழுதியாகனும்ங்கறது எழுதப்படாத விதி... அதனால நான் எழுதல, எழுதனும்ன்னு தோனுச்சு அதான் எழுதறேன்.



படத்தின் முதல் ஸ்டில் வந்தநாள்முதல் "மருதநாயகம்" படத்தைப்போல் ஆகிவிடுமோ என்ற பயத்தையும் கடந்து வெளிவந்தேவிட்டது. ஏமாற்றமளிக்காமல் திருப்தியும் அளித்திவிட்டது கூடுதல் சிறப்பு.

முடிந்தவரை படத்தின் கதையை சொல்லாமல் விமர்சனம் சொல்லப்போறேன். (அப்படியாவது தியேட்டருக்குப்போய் படம் பாருங்களேன்)

அனைவரது கடின உழைப்பால் தமிழ் சினிமாவின் மற்றொரு மைல்கல்லாக மாறியிருக்கிறான் அரவான். படக்குழுவினருக்கு வாழ்த்துகள் (வாங்கப்போகும் விருதுகளுக்கும் சேர்த்து)

மகாபாரதத்தில் பாரதப்போர் தொடங்கும் முன்பு பாண்டவர் வெற்றிக்காக பலி கொடுக்கப்பட்ட அர்ஜுனரின் மகன் பெயர்தான் "அரவான்". படத்திற்கும் அது பொருத்தமான தலைப்புதான்.

சு.வெங்கடேசன் அவர்கள் எழுதிய சாகித்திய அகாடமி விருது பெற்ற "காவல்கோட்டம்" நூலின் சிறு பகுதியில் இருந்து மெருகேற்றி திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். தனது முந்தைய படங்களின் சாயல் சிறிதும் இல்லாமல் ஒரு பீரியட் பில்ம் எடுக்க முன்வந்தமைக்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட்.

இந்தப்படம் 18 ஆம் நூற்றாண்டில் மதுரையை சுற்றி களவு செய்வதையே தொழிலாக செய்து, வாழ்ந்து வந்த கள்வர் கிராமத்து மக்களை சுற்றி பிண்ணப்பட்ட கதை.

ஆரம்ப காட்சியிலேயே வெள்ளியை (நட்சத்திரங்களை) வைத்து காலத்தை கணக்கிட்டு களவுக்கு செல்வதும், களவுக்கு போன இடத்தில் அவர்கள் செய்யும் களவு தந்திரங்களும் சபாஷ்... எண்ணெய் விட்டு சத்தமில்லாமல் தாள் திறப்பதும், குருட்டுக் கிழவியின் வெற்றிலை இடிக்கும் சத்தத்தில் நகைப்பெட்டியை ஆட்டயைப்போடுவதும் இயக்குனரின் "களவு" டச்.


படத்தின் ஆரம்பத்தில் பசுபதியின் கை ஓங்கினாலும், ஆதி தனது அசாத்திய நடிப்பால் அதன்பின் அனைவரையும் கவர்கிறார். இருவரும் தங்கள் கதாபாத்திரத்திற்காக மெனக்கெடுத்திறார்கள். சிக்ஸ் பேக் வைத்து, ஆதி இந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார்.

படத்தின் முதல்பாகம் முழுவதும் களவு தந்திரங்களும், ஆதி யார்? என்று அறியும் ஆர்வத்திலும் நகர்கிறது. இரண்டாம் பாகத்தில் ஆதியைப்பற்றிய முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கிறது. படத்தின் இறுதியில் களவு கிராமம் காவல் கிராமமாக மாறுகிறது.

பீரியட் பில்ம் என்பதால் கலை-இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு பின்னணியில் அதிகம் உழைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தின் ஒளிப்பதிவில் நாமும் 18 ஆம் நூற்றாண்டின் காடு... மலை... களவு என சுற்றித்திரிகிறோம்.

வசந்தபாலன் & சு.வெங்கடேசன் அவர்களின் எளிய வசனம் படத்திற்கு கூடுதல் பலம். உதாரணத்திற்கு சில : "தூங்குறவன் காவலுக்கு போகக்கூடாது, தும்முறவன் களவுக்கு போகக்கூடாது", "களவுல இருந்துதான் காவல் பொறக்கும்", "எல்லாரும் சாகத்தான் போறோம். சாகாத மனுசன்ன்னு யாராச்சும் இருந்தா அவனுக்கு கட்டிவைங்க"

பாடகர் கார்த்தி இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார். வாழ்த்துகள் சார் !!! பாடல்கள் கேக்க இதமாக இருக்கிறது. பின்னணி இசையைப்பொருத்தவரை தேறுகிறார். ஆனால் படத்தின் இறுதிக்காட்சியில் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். இளையராஜாவா இருந்திருந்தா கண்கலங்க வைத்திருப்பார் என்பதே அநேக பேரின் கருத்து.

சிமிட்டி கதாபத்திரத்தில் வரும் "அர்ச்சனா கவி", ஆரம்பத்தில் கலகலப்பாக தோன்றுவதிலும், அதன்பின் ஆதி திருமணம் செய்ய மறுக்கும்போது கண்கலங்குவதிலும் மனதை அள்ளுகிறார்.

ஹீரோயின் தன்சிகா இரண்டாம் பாகத்தில்தான் தோன்றுகிறார். கருப்பான தேகம், கண்ணால் பேச்சு என்று ஆரம்பித்து ஆதியை கல்யாணம் செய்யும் காட்சியில் கவனம் ஈர்க்கிறார்.

விலைமகளாக வரும் ஸ்வேதா மேனன் ஒரு பாடலில் கவர்ச்சியும்... அதன்பின் வரும் ஒரு முக்கிய காட்சியிலும் அசத்துகிறார். "அரைஞான்கொடி" காட்சி ஒன்றுபோதும் இவரையும் இயக்குனரையும் பாராட்ட.

ராசாவின் மனைவியாக (சின்ன ராணி) வரும் ஹேமா மாலினி கண்களில் வஞ்சம் வைத்து பேசுவது அசல் வில்லத்தனம்.

அஞ்சலி இந்தப்படத்தில் சும்மா வந்துபோறார் (அஞ்சலிக்காக படத்துக்கு வந்து, ஏமாந்து நொந்துபோனான் அஞ்சலி ரசிகனான என் நண்பன்)

பரத்தும் படத்தில் நடித்திருக்கிறார் அவ்வளவே...

சிங்கம்புலியின் "கொழுந்தியா" காமெடியும், "கொளுந்தியாவ பத்திரமா பாதுகாக்கனும்" வசனமும் சிரிக்கவைக்கிறது.

யாருப்பா இந்த ராசா? என்று தியேட்டரில் கேக்க வைத்துவிட்டார் ராசாவாக நடித்தவர்.

படத்தின் நிறைகள்:

பீரியட் பிலிம்ன்னாலே "மனோகரா" காலத்து வசனம்தான்னு  இல்லாம எளிமையா நடைமுறை வசனம் படத்தில பேசறது பெரிய பலம்.

சித்தார்த்தின் ஒளிப்பதிவு நம்மையும் ஒரு கதாபாத்திரமா மாத்தி படத்துல சுத்திவர வச்சுருது.

18 ஆம் நூற்றாண்டின் கதாபாத்திரமாகவே மாறி... வாழ்ந்த நடிகர்கள் மிகப்பெரிய பலம்.

படத்தின் குறைகள்:

படத்தின் பெரிய குறை இரண்டாம் பாகத்தில் ஸ்பீட் பிரேக்கராக நிறைய பாடல்கள் வருவதுதான். அவசியம் இத்தன பாட்டு வேணுமா?

படத்தில் ஆங்காங்கே தென்படும் மசாலாத்தனம் அடுத்த குறை.

ஹீரோ மாடு மேல வர்றப்ப போடற சண்ட காட்சியிலயும் மத்த காட்சியிலையும் கிராபிக்ஸ் அப்பட்டமா தெரியுது. ஏன் பாஸ் சரியா கவனிக்கலையா?

படம் முடிஞ்சதுக்கு அப்புறம் மரண தண்டனை தடை செய்யப்படவேண்டும் என்ற ஸ்லைட் எதுக்காக பாஸ்? படத்தோட கடைசி அஞ்சு நிமிசத்துக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?

பினிஷிங் டச்:

கனமான கதை... கடின உழைப்பு... தமிழ் சினிமாவில் மற்றுமொரு மைல்கல் - அரவான் (சொல்லமறந்துட்டேன்... மசாலா பட விரும்பிகள், இந்த படத்துக்கு போகாதீங்க)

புலித்தமிழனும் பூனைத்தமிழனும்..


பக்கத்து நாட்டுல புலிகளா இருந்ததாலவோ என்னவோ.. தமிழ்நாட்டுல நாம எல்லாரும் பூனை மாதிரி திரியுறோம். நேரடியா விஷயத்துக்கு வருவோம். மலையாளி  மாதிரியோ, சிங் மாதிரியோ நம்ம இரத்தத்த, நம்ம இனத்தவன காக்குற அந்த குணம் நம்ம கிட்ட இல்லாம போச்சு. விளைவு. கண்ணு முன்னால லச்சம் லச்சமா கொன்னு குமிச்சானுங்க. பொம்பள புள்ள, உயிர் இல்லாத உடல்னு பாக்காம நரமாமிசம் தின்பதை விட கொடுஞ்செயலாக கருதப்படும் “necrophilia” என்ற சைகோ குணாதிசியத்த காட்டுனானுங்க.
நம்ம வீட்டு புள்ளையா இருந்தா ஒவ்வொருத்தனும் கத்திய தூக்கிட்டு கெளம்பிருக்க மாட்டோம்?? அத தான் செஞ்சாங்க போராளிகள். ராஜீவ் கொலை என்னும் மர்ம சரித்தரத்தின் கடைசி பக்கங்களில் இவர்களின் இரத்தத்தை ஊத்தி மறச்சாச்சு..  சரி. இப்ப கடைசி கடைசினு எல்லைல வடகிழக்கு இந்தியால சீனா இன்னும் தன் அராஜகத்த நிறுத்தாம, இலங்கை சீனாக்கு “Strategic Stonghold” என்று அழைக்கப்படும் அதிமுக்கிய இராணுவ தளவாட மையங்கள நிறுவ இடம் கொடுத்து இந்தியா முதுகுல குத்தின அப்புறமும் இவன், இந்த SM Krishna, இலங்கைக்கு எதிரா இந்தியா போர்க்குற்ற தீர்மானத்துல கையெழுத்து போட போறது மாதிரி ஒரு தோற்றத்த கொடுத்து , இலங்கை ராஜதந்திர குழுவ இங்க வரவச்சு பேசினான். இப்ப, இன்னிக்கு march 3, 2012ல இலங்கைக்கு எதிரா கொண்டு வரப்பட்ட தீர்மானத்துல, இவன் இலங்கைக்கு  ஆதரவா செயல்பட்டிருக்கான்.. அப்படி என்ன பேசுனிங்க உங்க ராஜதந்திர கூட்டமைப்புல?  இத்தனை கோடி தமிழங்கள நீங்க நம்பிக்கை துரோகம் பண்ண வைக்க அவன் உங்களுக்கு என்ன கொடுத்தான்? சீனாவ வெளியெத்த போறானா?? இல்ல.  சர்வதேச அரங்குல ஐ.நா பாதுகாப்பு கூட்டமைப்புலனு  இந்தியாக்கு ஆதரவான நிலைய எடுக்க போறானா?? எடுக்கல. அப்புறம் என்ன மயித்துக்குடா  தேசியம் தேசியம்ன்னு சொல்லி எங்கள கொன்னீங்க? கொலைகார பாவிகளா..  துப்பாக்கி மட்டும் இல்ல, அத புடிச்ச கையும் உங்களோடது தானா?? அந்த உண்மை தெரிஞ்சா நாங்க உங்கள தோக்கடிபோம், ஆட்சில இருக்கவிட மாட்டோம்னா நெனச்சிங்க?
அந்த அளவுக்குலாம் நாங்க “worth” இல்லப்பா..
என்னதான் பெரிய ராஜதந்திர “Foreign Policy” யா இருந்தாலும், இங்கன இருக்கிறவன் நல்லதுக்கும் சேத்து தான அந்த எழவு பாலிசி ?? அப்ப ஈழத்தமிழன் செத்தது எங்க நல்லதுக்காகவா??
போர் குற்ற நடவடிக்கை இலங்கை மேல எடுக்கப்பட போறது இல்ல. ராஜபக்சே உள்ளிட்ட ஒரு கூட்டத்து மேல தான?? நீ என்ன பண்ணிருக்கலாம்? இன்னோரு பொம்மை அரசாங்கத்த வரவச்சு உன் சாம, தான, பேத, தண்ட பலத்த காமிச்சிருக்கலாம்? சீனாவையும் விரட்டிருக்கலாம்? Interests of ‘Intelligence Bureau, External Affairs, Foreign Policy, Internal Affairs, Regional Stability’ எல்லாம் கிடைச்சிருக்கும்.. அத செய்யல. இதையெல்லாம் யோசிக்கும் போது, உங்க நிலைல அம்பானி, மிட்டல் போன்ற பெரு முதலாளிகளோட ஒன்றுபட்ட இலங்கையின்  வியாபார சந்தைக்கான விருப்பம் தான் தெரியுது. தனி ஈழமோ சின்ன சந்தை தானே?? பொம்மை அரசாங்கம் alibi தர வேண்டி உங்கள் விருப்பங்களை நிறைவேத்த தயக்கம் காட்டுமே?? சாயம் வெளுத்துருமே??
போர்ல சாக கொடுத்துட்டு, அப்படி ஏதும் நடக்கவே இல்லனு சொல்ற ஒரு நாட்ல வாழ்ந்துகிட்டு இருக்கிற நாம எல்லாரும், அரசாங்க எதிரியென முத்திரை குத்தபடாமல் நமது விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வழி உள்ளது. நீங்கள் இதனை செய்ய காவல்துறைக்கோ, மற்ற அரசு படைகளுக்கோ பயப்பட தேவையில்லை. போகிற போக்கில் செய்ய முடியும் இந்த காரியத்தை செய்தீர்கள் என்றால் உங்கள் தமிழ் இரத்தமும், சுயநலமும், மனசாட்சியும் சேர்ந்து வெற்றியடையும். இதற்குமுன் எழுந்த எழுச்சி எல்லாம் வீழ்ச்சி அடைந்ததற்கு அரசியல் அமைப்பும், நமது தயக்கமும் மட்டுமே காரணம்.. இப்பொழுது இலங்கையில் மட்டுமல்ல, தமிழக மீனவனுக்கும் நாம் நேர் செய்து தர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது குறைகளையும் தாண்டி இதை எப்படி சாதிக்க??
அதற்கு முன் சில விஷயங்கள்.
1) இலங்கை கிழக்கும் மேற்கும் ஓடும் கடல் வணிக வளையத்தில் முக்கிய கன்னியாக இருக்கிறது. கிழக்கில் எண்ணை வளம் மிக்க நாடுகள். மேற்கில் மற்ற அனைத்திலும் வளம் மிக்க நாடுகள்.
2) இந்தியாவை சேர்ந்த இந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வருவாய் வழி முக்கிய  மார்க்கம் என இலங்கையை நிர்ணயித்து உள்ளன.
ICICI Bank. Infosys. TVS & Sons Ltd. Griffith Laboratories Ltd. Alstorm Projects India Ltd. Brigade Hospitality Services Ltd. Srei Infrastructure Finance Ltd.
3) அதிலும் சில பன்னாட்டு நிறுவனங்கள் “Conglomerate” ஆக உருப்பெற்றுள்ளன..
CEAT-Kelani Associated Holdings, Mackwood Infotec, GTB Colombo, Ceylon Ambuja Cement, Taj Lanka Hotels, Bensiri Rubber Products. Asian Paints & Ceylon Glass Company Lanka Ashok Leyland, Mphasis, Lalith Gangadhar Constructions.
இதில் கவனிக்க தக்கது, இந்தியாவை சார்ந்த public ltd உம் இலங்கையில் கோலோச்ச காத்திருப்பது. Power Grid Corporate India, National Thermal Power Corporation, Indian Oil Corporation.
4) இந்த பன்னாட்டு நிறுவனங்கள் இலங்கையின் சந்தையை மட்டுமல்லாது  வளத்தையும் கண் வைத்துள்ளன. இலங்கையில் இவர்கள் எதிர்பார்ப்பது   steel, rubber, cement, power & energy, oil exploration, production, telecom, real estate, tourism, computer software. கல்வி தொழிற்சாலையும் அங்கே மாபெரும் வரவேற்பை பெரும்.
இதை எல்லாம் படித்த உடன் என்ன தோன்றியது?? அதே தான்.. இலங்கை இனப்படுகொலையை இந்தியா ஆதரித்தற்கும், தமிழ் விரோத போக்கை கடைபிடிபதர்க்கும் ஒரே காரணம் தான். இவற்றை வைத்து லாபம் அடைபவன் கொடுக்கும் எச்சில் காசு. Blood Money. குடிமக்களையே இந்த எச்சில் காசுக்காக  ராணுவம் அனுப்பி கொல்ல தயங்காத அரசாங்கமப்பா இது. POSCO, VEDANTA போன்ற நிறுவனங்கள் ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநில பூர்விக குடிகளின் ரத்தத்தில் குளிக்க நினைக்கிறதோ அதே போலத்தான் ஈழத்தில் நாம் மேலே பார்த்த நிறுவனங்கள். CRPF உயர் அதிகாரி இந்த மாநில CIVIL UNRESTக்கு தீர்வாக  இலங்கை படுகொலையை மேற்கோள் காட்டியதை நினைவு கூறுங்கள்..
இவை அனைத்தையும் பார்க்கும் பொழுது நமது எண்ணம் ஈடேற இந்த சதிவலையை அறுக்க வேண்டியது புரிகிறது. அறுக்க வேண்டிய இடமும் தெரிகிறது. உங்கள் எதிர்ப்பையும், புறக்கணிப்பையும் இந்த நிறுவனங்களின் மேல் காட்டுங்கள். தமிழ்நாட்டு தமிழனும், அகில உலக தமிழனும், ஈழத்தமிழனும் ஆக இவர்களின் சந்தையில் ஒரு பெரிய பங்கை நிர்மூலம் ஆக்குங்கள். இவர்கள் எதிர்பார்க்கும் உங்கள் சூழல் சார்ந்த பொருள் மூலத்தை இவர்களின் போட்டியாளர்கள், நமக்கு குழிபறிக்க துநியாதவர்களுக்கு கொடுங்கள். இவர்களின் ஆட்டத்தின் எதிரிகளை நமக்கு உறவாக்குங்கள்.
Airtel, Ashok Leyland, TVS, Infosys, TAJ, Reliance, IOC. நன்றாக கவனியுங்கள். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டு தமிழன் தரும் பணத்தை நம்பியும் தொழில் செய்கிறார்கள். நாம் இந்த  நிறுவனங்களை பயன்படுத்தாமல் புறக்கணித்தால் இவர்களின் வருவாய் வழி தடைபடும். அப்பொழுது அதற்கான காரணம் இவர்களின் இலங்கை விருப்பு, அதனால் தமிழன் அடைந்த  வெறுப்பு என தெரியும். உயிர்பிழைத்த மீதி தமிழனுக்காக என்று வருவார்கள். அதை தருகிறோம். இதை செய்கிறோம் என்று. எங்கே?? நாம் வீடு கட்ட கொடுத்த காசே அவர்களை அடைய காணோம். இதில் இவன் தொழில் செய்து, அதில் என் இனம் விருத்தி அடையவா?? சிங்களன் கை கட்டி வேடிக்கை பார்ப்பானா?? விட மாட்டான். அதற்குரிய முகாந்திரங்களை செதுக்கி கொள்வான். கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்களில் அவரவர் மண்ணின் மைந்தருக்கே பெருநிறுவன வேளைகளில்  முன்னுரிமை. இதை சிங்களன் எப்படி திரிப்பான் என நாம் அறியாததா?? அதே நேரத்தில் இந்த முதலாளிகள் நம் இனத்தவனுக்கு பிச்சை போடவும் வேண்டாம். கொஞ்ச நாளில் சுதந்திரத்துடன் அவர்களே அவர்கள் சோற்றுக்கு வழி செய்து கொள்வார்கள்.
நமது இந்த முடிவு எல்லாருக்கும் தெரிந்தே இருக்கட்டும்.
தானாக இந்தியா தனது கொள்கையை மாற்றும் கண்கட்டு வித்தையை காணலாம். வேறு வழி இல்லாத இந்த முதலாளிகள், மிச்ச வியாபார நோக்கில்  ”lobbying” செய்வார்கள். அதில்  நமது நோக்கம் நிறைவேறும். இழந்த நமது உறவுகள் போக இருப்பவர் இனி நிம்மதியாக வாழவும்; நமது உறவை அறுத்தவர்கள் அதற்குரிய தண்டனை அனுபவிக்கவும் இதுவே நல்வழி.. இப்போதைக்கு.. இதை முதலில் செய்து முடித்து அடுத்து வருவதை பார்க்கலாம். இதன் மூலம் நாம் இந்த நாட்டின் அதிகார வர்க்கத்திற்கு ஒரு முக்கியமான செய்தி சொல்லப்படும். நமது ஒன்றுபட்ட லட்சியமும், நமது தெளிவும் பிழையின்றி கார்பரேட் புத்தகங்களில் ஏற்றப்படும். தமிழக மீனவனை எவனாவது அடித்தால் அவனை இந்திய நாட்டின் சட்டம் வளைக்கும். நாமும் இறந்தவர் குடும்பத்திற்கு கோடி கணக்கில் பணம் வாங்கலாம்.. எத்தனை கோடி கொடுக்க முடியும் அவனால்?? இந்திய அரசு தன்னுடைய வருமானம் தடைபட்ட அடுத்த நிமிடம் கொடுப்பதை நிறுத்தி விடும்.. சீனாவை பற்றிய கவலை நமக்கு வேண்டாம்.. நம் இனத்தவனை கொல்வதற்கு முன் இந்த அரசாங்கம் இதை யோசித்திருக்க வேண்டும். சீனா மேலும் வலுவாய் காலூன்ற முயற்சிக்கும் போது இந்த இந்தியனுக்கு  தமிழீழம் பிடிக்கும்.. நல்லது நடக்கும்..
(இந்த பதிவை உங்கள் பதிவுகளில் எடுத்து கொள்ளுங்கள். எதையும் திரிக்காதீர்கள். உங்கள் சமூக தளங்களில் பகிருங்கள். உயிர் பிழைத்த தமிழனுக்காக இதாவது செய்வோம்.)
Post by: Venkatesh Pandian