நம் வாழ்வின் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போகும் எந்த புத்தகமும் அத்தனை சீக்கிரத்தில் நினைவிலிருந்து விலகிவிடுவதில்லை. இந்த நாவலானது என் வாழ்வில் நான் கடந்துவந்த பெண்களின் பரிணாமங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கிறது. முதல் அத்தியாயத்திலேயே நாவலின் கதாநாயகி சுமித்ரா, தனது 38வது வயதில் மரித்துக்கிடக்கிறாள். ஒரு பெண் தனது 35வது வயதில் பூரண அழகியலோடு தோன்றுகிறாள் என ஜெயமோகன் ஒருமுறை சொன்னதுபோல கற்பனையில் காட்சியளிக்கிறாள் சுமித்ரா. காலைவரை நடமாடிய ஒருவர் இனி ஒருபோதும் வரப்போவதில்லை என்ற இந்த மரணம் தந்த கசப்போடு சிறுகச்சிறுக வீட்டிற்குள் கூடுகிறார்கள். அவர்கள் நினைவின் வாயிலாக யார் இந்த சுமித்ரா என நாமறிய "கல்பட்டா" நாராயணன் சொன்னதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் கே.வி.ஷைலஜா. வாழ்வின் அத்தனை காலகட்டத்திலும் கண்ட, ரகசியமடங்கிய, தனித்துவமான பெண்களின் கார்பன் காப்பி வடிவம்தான் சுமித்ரா நாவல்
"மரண வீடு பிரமாண்டமானதொரு பின்புலம். மரண வீட்டின் சுவர்களில் மோனோலிசாவின் புன்னகை மேலும் மர்மமாக பரவி வருவதை தெளிவாகப் பார்க்கலாம்".
மலையாளத்தில் நாவலின் பெயர் "இதர மாத்ரம்" (அவ்வளவுதான்). அவ்வளவுதான் இனி அவள் வரப்போவதில்லை. அவளோடு பழகிய நினைவுகளை, பனி புல்மீது படர்வதைப்போல அசைபோடுகிறார்கள் கதைமாந்தர்கள்.
திருமணமாகி எட்டு வருடங்களாகியும் குழந்தையில்லாத கந்தம்மா அத்தை, எனக்கு முழுப்பரிட்சை லீவ் விட்டதும், தனது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுவாள். தாய்மை என்பது கருவிலிருந்தே பெண்களுக்கு வந்த குணம் என்பது உண்மை என்பதுபோல என்னைக் குழந்தையாக்கி கவனிப்பாள். மடியில் கால்களைக்கிடத்தி தொட்டதுகூட தெரியாதவண்ணம் மிருதுவாய் நகம் வெட்டுவாள். மளிகைக்கடையிலிருந்து திரையரங்குவரை செல்லும் வழியெங்கும், அண்ணன் பையன் லீவ்க்கு ஊருக்கு வந்திருக்கான் என என் தலைகோதியபடியே, எதிரே வருபவர்க்கெல்லாம் அறிமுகப்படுத்துவாள். லீவ் முடிந்து நான் திரும்பும்போது மளிகைக்கடை பில் தாறுமாறாய் எகிறும். பின் இரண்டுநாட்கள் சொல்லிவைத்தாற்போல் அத்தைக்கு காய்ச்சல் என மாமாவின்மூலம் தகவல் வரும். பிற்காலத்தில் குடும்பத்தகராற்றின் காரணமாக, வீடுமாறி வந்துவிட்டபின், பன்னிரண்டு வருடங்கள் பேச்சே இல்லை. அவளுக்கு அதன்பின் ஒரு பெண்குழந்தை பிறந்தும்விட்டது. சமீபத்தில் சொந்த ஊர்த் திருவிழாவிற்கு சென்றபோது என்னைக்கவனித்து சிறுபுன்னகையோடு அருகில்வந்து "நல்லாருக்கியாடா!" என அவள் தலைகோதியபோது பதின்மத்தின் அதே ஸ்பரிசம். அவள் கண்ணுக்கு நான் அதே சிறுவனாகத் தெரிந்திருப்பேன் என்பது மட்டும் நிச்சயம். இதேபோன்ற ஒரு கதைதான் புருஷோத்தமனுக்கும் சுமித்ராவிற்கும் இடையே. தந்தையின் மருத்துவத்திற்காக சுமித்ராவிடம் விட்டுச் செல்லப்படும் சிறுவன் புருஷை, குழந்தைபோல் கவனித்து அரவணைக்கிறாள். அவனுக்குப் பிடித்ததை சமைத்துக்கொடுக்கிறாள். முதலில் ஒட்ட மறுக்கும் அவன், சிகிச்சை முடிந்து இத்தனை சீக்கிரம் தன் பெற்றோர் வந்திருக்கத்தேவையில்லை என எண்ணுமளவிற்கு , அவளின் தூய அன்பிற்கு குழந்தையாகிப்போகிறான். அவள் சமையலின் ருசி காலத்திற்கும் தன் நாக்கில் தங்கிவிட்டது. கல்லூரிக்குப் போனபின்னும்... தன் காதலியைப்பற்றி முதல் ஆளாக இவளிடம் சொல்வதுவரை அதே குழந்தையாக வளர்கிறான் சுமித்ராவிடம்.
ரகசியங்கள் பகிர்வதும், பகிரப்பட்ட ரகசியம் பத்திரமாய் இருப்பதும் நேர்ந்தால் பெண்களுக்கிடையே அன்னோன்யம் எளிதில் வந்துவிடும். சுமித்ராவின் பள்ளி மற்றும் கல்லூரிக்கால தோழிகள் கீதாவும், சுபைதாவும். மூவரும் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் ரகசியமும், பகிரும் கடிதங்களும் அத்தனை பொறாமையை நம்மில் ஏற்படுத்துகிறது. அந்த ரகசியங்களின்வழி தங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்கள் அனைவரும் வாழ்வுநெடுக தங்களுக்கென ரகசியம் ஒன்றை சுமந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
ஒருமுறை அரைநிர்வாணமாக சுமித்ராவைப் பார்த்துவிட்ட மாமன்மகன் அப்பு, பயணம் மட்டுமே தன்னை முழுமையாக்குகிறது என உணரும் தாசன், மகன் வீட்டைப்பிரிந்து தனித்து வாழும் கௌடர், பணியாள் கருப்பி, மொத்த வயநாட்டின் ஆண்களையும் வசப்படுத்தியிருக்கும் மாதவி, எத்தனையோ முறை பேசுவதற்காய் மனதில் ஒத்திகை பார்த்து ஒருமுறைகூட பேசாமல் போன கௌண்டர், மழைக்காலத்தில் மட்டும் தவணைமுறைக்கு வயநாட்டில் வெண்கலப் பாத்திரங்கள் விற்றுச்செல்லும் பொதுவாள், தோழிகள், தனது மூத்தமகள் அனுசுயா என ஒவ்வொருவருக்கும் சுமித்ராவைப்பற்றி யோசிக்க ஒவ்வொருமாதிரியாக கதையிருக்கிறது.
அத்தை, அம்மா, அக்கா, தோழி, காதலி, மனைவி, என நாம் பழகிய அத்தனை கதாபாத்திரங்களின் சாயலையும் தன்னில் நிறைத்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் வலம்வருகிறாள் சுமித்ரா. உங்களுக்கும்கூட ஏதாவதொரு காட்சியில் அறிமுகமானவளாய் இருப்பாள் இந்த சுமித்ரா. பழங்கலத்தை தனது அதிகாரக் கொட்டாரமாக வலம்வருகிறாள். தோழி வரும்போது அது அவர்கள் ரகசியம் பகிரும் அவுட் அவுஸ் ஆகிறது. கணவனின் அக்காமகள் வந்து அதை ஆக்கிரமிக்கும் தருணங்களில் சுமித்ராவிற்குள் ஒரு பாதுகாப்பின்மையும், தனது அதிகாரமிடத்தை இழந்த வெறுமையும் வந்துபோகிறது.
வயநாட்டின் காப்பிச்செடி வாசமும், பச்சை நிறமும், எப்போதும் கசியும் ஈரமும் நாவல் படித்து முடித்தபின்னும் பலகாலம் நம்மோடு படியும். "கல்பட்டா" நாராயணன் ஒரு கவிஞர் என்பதால் உரைநடையில் அத்தனை கவித்துவம். அப்படியொரு காட்சிப்படுத்தல். ஜீவன் மாறாமல் படைப்பை மொழிபெயர்ப்பது அத்தனை சுலபமானதல்ல. ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பை பாராட்ட வேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம் "ஷைலஜாவின் நாவலைதான் நாராயணன் கொஞ்சகாலம் முன்பாக எழுதுவிட்டார்". சிதம்பர நினைவுகள் போன்று இதுவும் ஒரு மொழிபெயர்ப்பென்று நம்புவது மிகக்கடினமாய் இருக்கிறது.
தங்கள் மொழியின் சிறந்த படைப்புகளை நேர்த்தியான திரைப்படமாக்கி கொண்டாடுவதில் மலையாளிகள் பாராட்டுக்குரியவர்கள். பால்யகால சகி போன்று இதுவும் திரைப்படமாகியிருக்கிறதாம். நிச்சயமாக விரைவில் பார்த்துவிடவேண்டும்.
சுமித்ராவின் உடல் எரியூட்டப்படுவதோடு நாவல் முடிகிறது. புத்தகத்தை மூடும் கணத்தில், மனமின்றியும், மரணத்தை எப்படி அணுகவது எனத்தெரியாமலும் மெல்ல மெல்ல களையும் வயநாட்டு மனிதர்களைப்போல நாமும் வெளியேறுவோம்.
"உணர்ச்சி மிகுதியில் அழும் பெண் முகங்கள் வழியாகச் செல்லும் தீர்த்த யாத்திரைதான் வாழ்க்கை".
No comments:
Post a Comment
தங்கள் கருத்தை பதியவும்...