Tuesday, January 28, 2014

சிதம்பர நினைவுகள்

ஆற்றில் விழும் அரச இலையை தன்னோடு அடித்துச் செல்வதுபோல சில புத்தகங்கள் அதன் போக்கில் நம்மை உடன் அழைத்துச் சென்றுவிடும். அப்படிப்பட்ட புத்தகமொன்றுதான் சிதம்பர நினைவுகள்.

வெறுமையான தனித்த ஒரு பொழுதில் வாசிப்பதற்காக புத்தகக்கட்டில் தேடியெடுத்து, கொஞ்சம் வாசித்துப் பார்க்க ஆரம்பித்தேன். நம்பமாட்டீர்கள், அமர்ந்த அதே இடத்தில் இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் வாசித்து முடித்திருந்தேன். பொதுவாக என்னைக் கவர்ந்த புத்தகத்தை மட்டுமே இப்படி வாசிப்பதுண்டு.
 

இதை கட்டுரைத் தொகுப்பு என்பதைவிட ஒரு கவிஞனின் குறுக்குவெட்டுத்தோற்ற சுயசரிதை எனலாம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு. கேரளக் கவிதையுலகத்தின் முக்கியமான பெயர். தன் வாழ்பனுபவங்களை கைகளில் தெள்ளிய நீரைப்போல் அள்ளி நம் முன்னே காண்பிக்கிறார் இதில்.

தமிழாக்கம் செய்த கே.வி.ஷைலஜா மேடத்தை அடுத்தமுறை புத்தகக் கண்காட்சியில் நேரில் பார்த்து நன்றி சொல்லவேண்டும். அவ்வளவு கனகட்சித தமிழாக்கம்.

தன் தந்தையிடம் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியது முதல், தனியறையில் இளம்பெண்ணின் அருகாமையில் ஏற்பட்ட சபலத்தில் இடுப்பில் கைவைத்ததை எண்ணி வருந்துவதாகட்டும், கையில் காசில்லாமல் ஒரு வீட்டிற்குள் நுழைந்து பிச்சைக்காரன் எனக்கொடுக்கும் சோறை உண்ணும்போது இவரைத் தெரிந்திருந்த பெண்ணைப் பார்த்து தயக்கத்தோடும் பசியோடும் மீதிச்சோறை உண்பதாகட்டும்... இப்படி இன்னும் எத்தனை "ஆகட்டும்" சேர்த்துக் கொண்டு சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்பனுபவங்கள் அனைத்தையும் ஒளிவுமறைவின்றி நம் கண்முன்னே வைக்கிறார்.

மழைக்காலத்தில் பாறையிடுக்கில் கசியும் நீரைப்போல எனக்குள்ளே ஜில்லென்றிருக்கிறது. எதையோ இறக்கிவைத்த நிம்மதி. எதனிலிருந்தோ விடுபட்ட ஆசுவாசம் இதைப்படித்து முடித்ததும். சில புத்தகங்களை தோன்றும்போதெல்லாம் எடுத்து வாசிப்பேன். அந்தப்பட்டியலில் இப்புத்தகமும் இடம்பிடிக்கிறது.

எனக்கு ஒரு புத்தகம் பிடிச்சுட்டா உடனே அண்ணன் ஆறுவுக்கு படிக்க கொடுப்பேன். வாசிச்சு முடிச்சதும் அவனும் நானும் அதைப்பத்தி ஆரம்பிச்சு எங்க வாழ்க்கைக்கு வந்து நிப்போம். விரைவில் அவன நேர்லபார்த்து கொடுக்கணும். நண்பர்கள் அவசியம் படிக்கவும். கண்டிப்பா பிடிக்கும். என் பரிந்துரை.


கருப்பு

சிதம்பர நினைவுகள்; வம்சி பதிப்பகம்; விலை - Rs.100;

No comments:

Post a Comment

தங்கள் கருத்தை பதியவும்...