Tuesday, March 12, 2013

பாடும் தேவதை

March 12; பாடும் தேவதை ஸ்ரேயா கோஷல் பிறந்த நாள். என்ன எழுதுவதெனத் தெரியல. வழக்கம்போல அவங்கள Youtube-ல் பாடவிட்டுட்டு இன்னொரு டேப்பில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.


முதல்லலாம் "டோலா ரே டோலா" பாட்டு ஓடினா ஐஸ்வர்யா ராய் & மாதிரி தீக்ஷித்தோட "அந்த" இடுப்பு ஸ்டெப் தான் ஞாபகம் வரும். ஆனா இப்பல்லாம் ஸ்ரேயா கோஷல் தான் ஞாபகம் வர்றாங்க. திரையுலகத்துக்கு அறிமுகமான பாடலாச்சே. முதல் படத்திற்கே தேசிய விருது. மொத்தம் நான்கு முறை தேசிய விருதுகள் என சாதனைகளை அடுக்க இந்தப்பதிவொன்றும் விக்கிப்பீடியா பதிவல்ல. :-)

தமிழ்ல ஆல்பம் படத்தின் "செல்லமாய் செல்லம் என்பாயடா"ன்னு அவங்க பாடி அறிமுகம் ஆனாலும் ஆனாங்க... அன்னைல இருந்து பல தமிழ்க்குடும்பங்களுக்கு செல்லம் ஆகிட்டாங்க.

"When in Rome, do as the Romans do" - என்ற பழமொழிக்கு மிகச்சரியான பொருத்தம் ஸ்ரேயா கோஷல். எந்த மொழியில் பாடினாலும் அந்த மொழியைத் தாய்மொழிபோல் உச்சரிப்புப் பிழையின்றி பாடும் திறமை ஸ்ரேயாவிற்கு உண்டு. வெயிட் வெயிட். சண்டைக்கு வராதீங்க. ஆரம்பத்துல உச்சரிப்புப் பிழையோட தமிழ்ல சில பாடல்கள் பாடிருக்காங்கதான். மழலையின் பிழைபோல அதுவும் இனிமையாகத்தான் எனக்குப்படுகின்றது. தமிழ்ல மட்டும்தான் 'ழ'கர உச்சரிப்பு உண்டு. வேற எந்த மொழியிலும் இந்த உச்சரிப்பு கிடையாதுன்னு கேள்விப்பட்ருக்கேன். பின்ன உச்சரிப்புப் பிழை இருக்காத்தானே செய்யும்?! அவ்வ்.

ஒரு தனியார் நகைக்கடை விளம்பரத்தில் நடித்ததற்காக விமர்சிக்கப்பட்டார். யெஸ் அப்கோர்ஸ் தப்புதான். பின்ன வெறும் 40 நொடிகள்தான அந்த விளம்பரம் ஓடும். ஹூம். விளம்பர இயக்குனருக்கு என் நன்றிகள். "உந்தன் குரலினில் மயங்கினேன் மயங்கினேன் என் சுவாசக்காற்றே"... எனப்பொருத்தமான வரிகள். எந்த இசைக்கருவியும் பயன்படுத்தப்படாமல் ஸ்ரேயாவின் குரல் மட்டுமே மயக்கும் அந்த விளம்பரத்தை ரசிக்காமல் விமர்சிக்க எப்படித்தான் மனசு வருதோ?!


அப்புறம் இன்னொரு விசயம்... ஸ்ரேயா ரசிகர்கள் அனைவரும் எதிர்கொள்ற கேள்வி இது. "ஸ்ரேயாவை இவ்வளவு புகழ்ரீங்களே அப்ப மத்த பாடகிங்க எல்லாரும் நல்லா பாடியதே கிடையாதா? இனிமையான குரல் வேற யாருக்குமே கிடையாதா?". ஏன் பாஸ் காதலியை வர்ணிக்கறதுக்கும் தாயை மெச்சுவதற்கும் வித்தியாசம் தெரியாதா உங்களுக்கு? ஸ்ரேயா புடிக்கும்ன்னு சொல்றதால சின்னக்குயில் சித்ராம்மா, ஜானகி அம்மா, சொர்ணலதா அவங்கள புடிக்காதுன்னு அர்த்தம் ஆகிடுமா என்ன? ஸ்ரேயா - தேவதை; மத்தவங்க எல்லாரும் தாயன்புக்குச் சமானமானவங்க. என்னளவில் அவ்வளவுதான் வித்தியாசம்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் ஜூன்-26, 2010 "ஸ்ரேயா கோஷல் டே" எனக்கொண்டாடப்பட்டது. எங்களுக்கு வருடம் முழுவதுமே ஸ்ரேயா கோஷல் டே தான். :-)

ஸ்ரேயாவின் இனிமையான குரலுக்கு மெலடி மட்டும்தான் பொருந்தும் என்ற விமர்சனத்தை "சிக்னி சமேலி" பாட்டில் தகர்த்தெறிந்திருப்பார். போதாக்குறைக்கு கத்ரீனா கைப் பேயாட்டம் வேறு. செம்ம ஹாட் மச்சி.

கிட்டத்தட்ட அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார். இசையமைப்பாளர்கள் அனைவரிடமும் கால்-ஷீட் பிரச்சினையின்றி அயராது பணிபுரிகிறார்.

ஸ்ரேயா கோஷல் - உன் பேரைச் சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம். :-)))

லிங்க் ப்ளீஸ்ன்னு வந்து நிக்காதீங்க. :P இதோ ->

"டோலா ரே டோலா" பாடல் -  https://www.youtube.com/watch?v=Jbn39j-xa-k

ஐந்து மொழிகளில் விளம்பரம் : "உந்தன் குரலினில் மயங்கினேன் மயங்கினேன் என் சுவாசக்காற்றே"... - https://www.youtube.com/watch?v=xKs5yR8hw-s

சிக்னி சமேலி - https://www.youtube.com/watch?v=Gg7lcTCX5EY

கருப்பு

Tuesday, March 5, 2013

புத்தக வாசிப்பு :



ஏன் புத்தகம் வாசிக்கனும்?
புத்தகம் படிக்கறதால என்ன நன்மை?

சில காலத்துக்கு முன்னாடி வரைக்கும் எனக்கும் இந்த கேள்விகள்லாம் இருந்தது. வாசிப்பு பழக்கம் சமீபத்துலதான் எனக்கு வந்தது. பதிலும் கிடைச்சது. 



புத்தக வாசிப்பின் நன்மைகள்:

"பச்சை கலர் துப்பட்டா காத்துல பறந்துபோய் அவனது முகத்தில் விழுந்தது. இடது கையால் அதை எடுக்கும்போது அவனது வாட்ச் சூரிய ஒளியில் பட்டு பிரகாசித்தது"

மேற்சொன்ன இந்த வாக்கியத்த படிக்கறப்ப வாலி படத்துல சிம்ரன் அஜீத்த ஊட்டி சீன்ல கற்பனை பண்ணமாதிரி பச்சை கலர் துப்பட்டா பறக்குறமாதிரியும்... முகத்தில விழறதுமாதிரியும் கற்பனை பண்ணிருப்பீங்களே. இதாங்க புத்தக வாசிப்பின் முதல் நன்மை. புரியலையா? ஆமாங்க. இப்படி உங்களோட கற்பனை பண்ற சக்திய வளர்க்குறதுதான் புத்தக வாசிப்பின் முழுமுதல் நன்மையே. பொதுவா அமெரிக்கர்கள் டெலிவிசன அதான் TV-ய "இடியட் பாக்ஸ்" அப்படின்னு தான் சொல்வாங்க. ஏன்னா மேற்சொன்ன அதேகாட்சிய அது விஷுவல்-ல காமிச்சுரும். உங்கள கற்பனையே பண்ணவிடாது. அதனாலதான்.

புத்தக வாசிப்பு உங்கள இன்னொரு காலத்துக்கு... ஏன் இன்னொரு உலகத்துக்கே கொண்டுபோயிரும்... அதுவும் பைசா செலவில்லாம. பொன்னியின் செல்வன் படிச்சவங்களுக்கு இது நல்லாவே தெரியும். கிட்டத்தட்ட அந்த புக் படிக்குறப்ப ராஜ ராஜ சோழன் காலத்துக்கே போய் அவங்களோட இருந்துட்டுவந்த அனுபவம் இருக்கும். ஹாரி பாட்டர் தான் படிச்சேன்னு சொல்றீங்களா? உங்களுக்கும் அதேதான். ஹாரி பாட்டர் பக்கத்துல நின்னு சாகச காட்சிகள் பார்த்திருப்பீங்களே!


ஒரு புத்தகம் படிக்கறீங்கன்னு வைங்க. உதாரணத்துக்கு கதை படிக்கறதா வச்சுக்கலாம். கதைல வர்ற எல்லா கதாபாத்திரமும் உங்க கற்பனைல ஓடும். எல்லா கதாபாத்திரங்களோட உணர்வும் உங்களால புரிஞ்சுக்க முடியும். நிஜ வாழ்க்கைல இதேமாதிரி சம்பவங்கள் நடக்குறப்ப உங்களால மற்றவர்கள் உணர்வ எளிதில் புரிஞ்சுக்க இந்த வாசிப்பனுபவம் உதவும்ன்னு ஆய்வு சொல்லுது.

எகிப்து அப்படின்னதும் எப்படி பிரமிட் மற்றும் மம்மி ஞாபகம் வருதோ அதமாதிரிதான் புத்தக வாசிப்பு ஒரு நாட்டோட கலாச்சாரத்த கண்முன்னாடி கொண்டுவருது. யோசிச்சுப்பாருங்க உட்கார்ந்த இடத்துல இருந்தே உலகத்தையே சுற்றி வரமுடியும். எல்லா நாட்டு மக்களோட கலாச்சாரத்தையும் தெரிஞ்சுக்க முடியும்.

செஸ் அதிகம் விளையாடுன்னா "Decision Making Power" அதிகமாகும்ன்னு சொல்லுவாங்க. அதுமாதிரிதான் வாசிப்பு உங்களுக்கு பல்வேறு விசயங்களையும் அறிவையும் ஊட்டும்.

ரயில் பயணத்தில் நண்பர்கள் கிடைப்பதுபோன்றே பலரின் தனிமைக்கு சிறந்த நண்பன் புத்தக வாசிப்பு. உதாரணத்துக்கு என்னையே சொல்லலாம். இடைப்பட்ட ஒருவருடம் நான் மட்டும் தனியா இருக்க வேண்டியிருந்தது. அப்ப புத்தகங்கள்தான் எனக்கு சிறந்த துணை.

இதற்கு முன்னர் எழுத்தைப்பற்றியும் வாசிப்பைப் பற்றியும் எழுதிய குறும்பதிவு : Facebook - Post


Monday, March 4, 2013

ஜன்னல்



சமயத்தில்
என் ஜன்னல்
பால்யத்தின் நுழைவு வாயில்

பயணத்தில் மரங்களை
பின்நோக்கி ஓடவைத்தது...

மழைப்பொழுதுகளில் கம்பிகள் தாங்கிய
துளிகள் உடைத்து கழிந்தது பால்யம்...

திருவிழா தொடங்கிவிட்டால்
பிடியைத் தளர்த்தாது
பொழுதுகள் கழியும் வேடிக்கையில்...

என் விரல்பிடித்து
எப்போதும் பிரமிப்புகளை
காட்டியிருக்கிறது
ஜன்னல்

அது அப்படியேதான்
இருக்கிறது
நாம்தான் அதனருகே அமர்வதில்லை

இப்படியே இருந்திருக்கலாம்
எனக்கும் ஜன்னலுக்குமான
உறவு...

என்றோ ஒருநாள் இரவின் பிடியில்
ஜன்னல் கம்பிகள் பிடித்து
தேம்பியழுதது மட்டும்
நடந்திருக்காவிட்டால்...

ஊடல் பொழுது



தேநீர்க் கோப்பைகள் உருண்டோடும்
முகம் காட்ட மாட்டாய்
ஜன்னல் வழி கள்ளப்பார்வை வழியனுப்பும்
மாலை மேஜையில் காபி தனித்திருக்கும்
அழைத்தால் மறந்தும் திரும்பமட்டாய்
உன் ஊடல் பொழுதுகளில்...

ஒரு முத்தம்
ஒரு வெற்று குறுஞ்செய்தி
கொஞ்சம் சின்னதாய் மழைத்தூறல்

இதிலொன்று போதும்
ஊடல் முடித்து உன்னை வசப்படுத்த

எதுவுமில்லையா? போ போ...

நானும் முகம் திருப்பிக்கொள்வேன்
பின் நீ கெஞ்சவேண்டியிருக்கும்.