Wednesday, November 13, 2013

கடலை மிட்டாய் - ஒரு சிறப்பு விமர்சனம்

முன்குறிப்பு:
வாசிக்கும்போதே மொக்கையாக இருந்தால் நேராக இறுதிப்பகுதியான டிஸ்கி செல்லவும்.

அண்மைக்காலமாக கடலைமிட்டாய் சாப்பிடவேண்டுமென்ற எண்ணம் மனதை லோ-பேட்டரி அலர்ட் கண்டதுபோல் அரித்துக்கொண்டிருந்தது. சாப்பிட தக்கசமயம் கிடைக்குமென மனதை ஒருவாறாக ஆசுவாசப்படுத்தி வைத்திருந்தேன். இதற்குக்காரணம் எங்கள் ஏரியாவில் பெட்டிக்கடைகள் மிகவும் குறைவென்பதே.

தி.நகர் சென்றிருந்தபோது பெட்டிக்கடையொன்றில் பாட்டில் நிரம்ப Burj Dubai கட்டிடம் போன்றதொரு வடிவத்தில் எகனை மொகனையாய் கடலைமிட்டாய் அடுக்கிவைத்திருப்பது கண்டதும் அக்கடையின் வாசலுக்கு சீறிப்பாய்ந்தேன். ஐம்பது ரூபாய்க்கு கேட்டதுகண்டு கடைக்காரர் ஓர் அதிசயப்பார்வை வீசி... பின் பாக்கெட்டே இருக்குங்க முப்பது ரூபாய் எனச்சொல்லியவாறே நீட்டினார். வாங்கிக்கொண்டு அங்கிருந்த வேலைகளை முடித்தபின் கடலைமிட்டாய் சாப்பிடப்போகும் தருணத்தை எண்ணியவாறே அறைவந்து சேர்ந்தேன்.

மனிதர்களைப் போலல்லாமல் ஒளிவுமறைவற்ற தன்மையிலேயே கடலைமிட்டாய் பேக்கிங் இருப்பது ஏனென என்றாவது யோசித்திருக்கிறீர்களா! இன்றளவும் தென்னகத்தில் குடிசைத்தொழில் என்றவுடன் ஊறுகாய், பீடி சுற்றல் வரிசையில் கடலைமிட்டாய் இடம்பிடிக்கிறது.

பாக்கெட்டில் கையில் வேல் ஏந்தி குழந்தைவடிவத்தில் முருகன் சிரித்துக்கொண்டிருந்தான். "கண்ணன் ஸ்வீட்ஸ், ....." என சிவப்பு வண்ணத்தில் தயாரிப்பாளரின் முகவரி. இவர்கள் கடலைமிட்டாய் மட்டுமின்றி பின் நவீனத்துவ ஸ்நாக்ஸ் படைப்புகளில்கூட சிறந்தவர்கள். இவர்களது பிற படைப்புகளின் ரசிகன் எனச்சொல்லிக் கொள்வதில் பெரும் கௌரவம் எனக்கு.


பாக்கெட் பிரித்து உண்ண ஆரம்பித்ததும் நான் இந்த உலகத்திலேயே இல்லை. எனைச்சுற்றி சினிமாவில் வருவது போன்று புகைசூழ்ந்த சொர்க்கமே உண்டாகிவிட்டது. என் வாழ்நாளில் மறந்துவிடவே முடியாத அளவுக்கு மொறுமொறுவென்று அலாதியான சுவையுடையதாக இருந்தது அந்த கடலைமிட்டாய். இந்த இடத்தில்தான் 'கண்ணன் ஸ்வீட்ஸ்' பேரைத் தட்டிச்செல்கிறார்கள். என்றுமே அவர்கள் சோடை போனதில்லை. கடலைமிட்டாய் உலகின் தன்னிகரற்ற சக்கிரவர்த்தி அவர்கள். கடலைமிட்டாய் உண்ணும்போதெல்லாம் குழந்தையாகிப்போகிறேன். நீங்களும் சாப்பிடும்போது இதை உணர்வீர்கள் என நம்புகிறேன். இனி கொஞ்சநாளைக்கு இந்தச்சுவையின் தாக்கத்திலிருந்து என்னால் அவ்வளவு எளிதாக மீளமுடியாது என நம்புகிறேன்.

கடலைமிட்டாய் செய்முறை:
பாதியாக உடைத்துவைத்த கடலைகளை நன்றாக வறுக்கவேண்டும். வெல்லத்தை சரியான பதத்தில் காய்ச்சவேண்டும் (சரியான பதம் என்பது குறியீடு. தேவையான அளவு உப்பு என்பதுபோல இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாதது. அவ்வ்). சரியான பதம் வந்ததும் வறுத்த கடலையை அதில் கலந்திடவேண்டும். இல்லாட்டி எல்லாமே வேஸ்ட்டாகிடும். செவ்வக அல்லது சதுர வடிவ பலகையில் இதை நிரப்பி கத்தியால் கோடுகிழித்து ஆறியதும் பிரித்தெடுத்தால் சுவையான கடலைமிட்டாய் தயார்.

பொருள் - கடலைமிட்டாய்;
தயாரிப்பாளர் - கண்ணன் ஸ்வீட்ஸ்;
விலை - ரூ.30/-

டிஸ்கி:
 

தொன்றுதொட்டு இந்த டெம்ப்ளேட் விட்டா புத்தக விமர்சனம் எழுதவே முடியாதா?! என்றொரு கேள்வியை புத்தக விமர்சகர்களுக்கு வைத்துக்கொண்டு இந்த (மொக்கைக்)கட்டுரையை (!!!!) முடிக்கிறேன். முடியல.

1 comment:

  1. (சரியான பதம் என்பது குறியீடு. தேவையான அளவு உப்பு என்பதுபோல இன்றளவும் புரிந்துகொள்ளமுடியாதது. அவ்வ்). ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வவ்வ்வ் :)

    //மனிதர்களைப் போலல்லாமல் ஒளிவுமறைவற்ற தன்மையிலேயே கடலைமிட்டாய் பேக்கிங் இருப்பது ஏனென என்றாவது யோசித்திருக்கிறீர்களா!// superb ...!

    மத்திய சாப்பாட்டிற்குப்பின் சாப்பிடும் கடலைமிட்டாய்க்கு மட்டும் தனி ருசி இருக்கும் ....!

    அப்டியே கல்கோனா, பொறி உருண்டை , சீனிச் சேவு , அச்சு முறுக்கு , சோன் பப்டி இந்த ஞாபகமெல்லாம் வருது பாஸ் ...!

    ReplyDelete

தங்கள் கருத்தை பதியவும்...