Friday, June 15, 2018

மறக்க முடியாத 'முதல்'கள்!

'விதைய முழுங்கிட்டா... வயித்துல மரம் முளைக்கும்' என்ற பயம் காரணமாக, முதன்முதலாகப் பயந்து பயந்து உதடுகளால் எலுமிச்சை விதைகளை வடிகட்டிக் குடித்த, மாலை வெயில் நிறத்து நன்னாரி சர்பத் இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது.

முதல்முதலாக ரோஸ்மில்க் குடித்தது எப்போதென உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவனுக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவன் அப்பா வாங்கித்தரும் ரோஸ்மில்க் குடிப்பதற்காகவே, அவனை விடவும் அளவில் பெரிதாகவிருக்கும் துணிப்பைகளை தோள்களில் மாட்டிக்கொண்டு சைக்கிள் கேரியரில் அமர்ந்து சென்ற ராஜபாளையத்தின் 'வியாழக்கிழமை சந்தை' நாட்கள் அவனின் இளவேனிற்காலம். பஞ்சுமிட்டாய் கலரில் இருந்த ரோஸ்மில்க்கை க்ளாஸில் ஊற்றிய சிறிது நேரத்தில் க்ளாஸுக்கு வேர்க்கும். அதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டதாலேயே, அவனுக்கு இயற்பியலின் மீது பின்னாளில் காதல் உண்டானது.

'ஊற்றுப் பிடுங்குதல்' என்ற வார்த்தை பலருக்கும் பரிட்சயம் இல்லாமலிருக்கலாம். வெய்யில் காலத்தில் பொதுவாக ஒருவர் மாறி ஒருவர் அடித்தால் மட்டுமே நீர் தரும் அடி-பம்ப். கிரிக்கெட் விளையாடிவிட்டு கை கால்களை கழுவிவிட்டு, சப்பென்று இருக்கும் நீர் குடித்தால்தான் வீடு செல்லும்வரை களைப்பிருக்காது. ஊரைச் சுற்றி இருந்த கண்மாய் அனைத்தும் நிரம்பியதில், ஊற்றுக்கண் எல்லாம் திறந்திருந்த காலம் அது! நான்கு முறை அடித்ததும் அடி-பம்பில் நீர் வரத்தொடங்கியது. ஆனால், பத்து நிமிடங்களுக்கும் மேலாக யாரொருவரும் அடிக்காமலேயே பொலபொலவென நீர் ஊற்றிக்கொண்டிருந்தது அடி-பம்ப். அதற்குப் பெயர்தான் ஊற்றுப் பிடுங்குதல் என்பதை அவன் அப்போதுதான் தெரிந்துகொண்டான். அவன் வாழ்வில் பார்த்த ஒன்றிரண்டு இயற்கை விநோதங்களில் இதுவும் ஒன்று!



இப்படியாக அவனுக்கு நிறைய 'முதல்'கள் எப்போதுமே மறக்காதவையாக அமைந்தன! அப்படிதான் 2002-ல் தென் கொரியாவும், ஜப்பானும் இணைந்து நடத்திய உலகக்கோப்பை கால்பந்தும் அவனுக்கு மறக்கமுடியாதது. மைதானத்தில் உதைக்கப்பட்ட அந்த உலகக்கோப்பை கால்பந்தில் தான், இவனின் பதின் பருவக் காதலின் ஞாபகங்களும் படிந்தன. அவள் அண்ணனோடு தான் மேட்ச் பார்ப்பான் என்பதால், கால்பந்தைக் காரணம் காட்டியே அவளைப் பார்க்க அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்றான். முதல் காதல் செழித்து வளர கால்பந்து உரமானது. பிரேசில் அணியும், முன்னந்தலையில் மட்டும் முடி வைத்த ரொனால்டோவும் அவன் நெஞ்சில் பதிந்தது அப்படித்தான். அதனாலோ என்னவோ... அன்றிலிருந்து இன்றுவரை அவனுக்கு உலகக்கோப்பை கால்பந்து மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல்!

வட்டியும் முதலும் தொடரில் ராஜூமுருகன் எழுதிய வரிகள் தான் நினைவுக்கு வருகின்றன. "என்னதான் செய்ய முடியும்... ஒருக்காலும் நேற்றைக்குள் நுழையவே முடியாத நம்மால்!"