Thursday, June 6, 2013

இது அதே மழையில்லைதான்!



ஆதிமனிதனிலிருந்து வெகுதூரம்
வந்துவிட்ட என் பயணத்தில்...
கண்முன்னே எதற்காக பார்த்தேன்?!
மழைத்துளிகள் பூண்டு
கைவிரித்தபடி நின்ற நிர்வாண மரத்தை!
என்றாகிலும் ஒருநாள் இதைப்போலவே
கைகளில் ஏந்தவேண்டும் மழைத்துளிகளை...

இது அதே மழையில்லைதான்.
ஆனால் உன் முத்த கதகதப்பு அப்படியே இருக்கிறது.

யாரும் பார்க்காதபோது
சன்னல் கம்பிகளில் வழிந்தோடும்
மழைத்துளி உடைத்ததில்
கைகளில் ஏறிக்கொள்கிறது
ஈரமும் கொஞ்சமென் பால்யமும்...

மண்வாசம் கிளப்பிவிட்டுச்செல்லும்
முதல் மழைத்துளிபோல் உன்னை
எனக்குள் நிறைத்துவிட்டுச் செல்கிறது
ஒவ்வொரு மழையும்...

மழையில் பிறந்து மழையில் அழியும்
நீர்க்குமிழி
உன்னில் தொடங்கி உன்னில் முடியும்
என் காதல்...

என் தனிமை பற்றி உனக்கோர் உதாரணம் சொல்லவா?
தனிமையைத் துளிகளாக்கி பொழிய வைத்தால்
தோற்றுப்போகும் எத்தனை பெரிய மழையும்.

மழை! மழையாகவே இருக்க
ஒருபோதும் காத்திருப்பதில்லை.
யோசித்துப்பார்த்தால் கடலின்
பூமிப்பிரவேசம் மழை!

ஆழிசூழ் உலகழியும் வேளைவரை நானிருந்தால்...
வேறென்ன கேட்பேன்?!
உன்னோடு உன்னோடே
கொஞ்சம் மழையும் கோப்பை நிறைய தேநீரும்.